நாட்டை மீண்டும் பின்நோக்கி கொண்டுசெல்ல ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2048 ஆம் ஆண்டு அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்குவதே தமது போராட்டமாகும் என்றும் தெரிவித்தார்.
தேசிய நிலைமாற்றத்திற்கான திட்டவரைபை நாட்டுக்கு முன்வைத்து விசேட உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, அரச நிதி மறுசீரமைப்பு, முதலீட்டு ஊக்குவிப்பு, சமூகப் பாதுகாப்பு வலையமைப்பு, அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு ஆகிய பிரதான 04 தூண்களில் நாட்டின் எதிர்காலம் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக நிலைமாற்றும் செயற்பாட்டுக்கு அவசியமான தொழிநுட்ப மற்றும் நிலையான முயற்சிகளை அமுல்படுத்த தனியார் துறையிடமிருந்து முன்மொழிவுகளை பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நவீன உலகுக்கும், நவீன தொழில்நுட்பத்துக்கும் ஏற்றவாறு நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைக்காவிட்டால் நாடு பின்நோக்கிச் செல்லும் என்று தெரிவித்த ஜனாதிபதி, எனவே புதிதாக சிந்தித்து புதிய பயணத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதற்கு அவசியமான துரித பொருளாதார மறுசீரமைப்புக்களை செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஊழலை முற்றிலுமாக இல்லாது செய்ய டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பொறுப்புணர்வை அடிப்படையாகக் கொண்ட அரசாங்க பொறிமுறையின் மூலம் ஊழலுக்கு எதிரான நடைமுறைகளை செயல்படுத்துவதற்கு ஒரு விசேட செயலணி நிறுவப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த 5 ஆண்டுகளில் பொருளாதாரத்தை முழுமையாக ஸ்திரப்படுத்துவதோடு, அடுத்த 25 ஆண்டுகளில் இலங்கையை உயர் வருமானம் ஈட்டும் அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.
இந்த மறுசீரமைப்பு வேலைத்திட்டம், இலகுவான பணி இல்லையென்றாலும் நாட்டிற்கு சிறந்த விடயங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
அத்தோடு, 70 விதம்வரை உயர்ந்திருந்த பணவீக்கத்தை தற்போது 25.2 வீதம்வரை குறைக்க முடிந்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதனால் வாழ்க்கைச் சுமை படிப்படியாகக் குறைந்து வருவதோடு, ஒட்டுமொத்த சமூகமும் இந்த பயனை உணர ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கடினமான பயணத்தின் போது அனைத்து துன்பங்களையும் சகித்துக் கொண்ட நாட்டு மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்த ஜனாதிபதி, இந்தப் பாதையில் தொடர்ந்து செல்வதன் மூலம் சிறந்த பொருளாதாரத்தை நாட்டில் உருவாக்க முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
பாரம்பரிய அரசியலில் ஈடுபடும் சில குழுக்கள் பொருளாதார மறுமலர்ச்சியைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
பொருளாதார மறுசீரமைப்புக் குறித்து மக்களிடம் தவறான அச்சத்தை உருவாக்க முயற்சிக்கின்றன.
எப்போதும் கூறும் நாட்டை விற்கப் போகின்றார்கள் என்ற கோஷத்துடன் தொடர்ந்தும் மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றன என்றும் ஜனாதிபதி குற்றஞ்சாட்டினார்.
2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வெளிநாட்டில் உள்ள இலங்கைப் பணியாளர்கள் அனுப்பிய பணம் 80.6 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
புதிய வரிக் கொள்கைகள் காரணமாக 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 210 பில்லியன் ரூபா மேலதிக வருமானம் கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதலீட்டை ஊக்குவிப்பது மிக முக்கியமான காரணியாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி, தென் கொரியா, சிங்கப்பூர் போன்று, நமது நாட்டையும் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக உருவாக்குவதே தமது அபிலாஷையாகும் என்று குறிப்பிட்டார்.
அதேபோன்று, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, பசுமை ஹைட்ரஜன் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் போன்ற நவீன மற்றும் நிலையான முயற்சிகளில் கவனம் செலுத்த அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், பாரிய நஷ்டத்தில் இயங்கி வரும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை மற்றும் ஸ்ரீலங்கன் எயார் லைன் ஆகியவற்றை இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றத் தேவையான சீர்திருத்தங்களையும் மறுசீரமைப்புகளையும் செய்ய வேண்டியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
2048 ஆம் ஆண்டளவில் நாட்டை முழுமையான அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, இதற்கான ஒத்துழைப்பை இளைஞர்கள் வழங்குவார்கள் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.