தமிழர்கள் அதிகளவில் வாழும் வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கலை கட்டுப்படுத்த இந்தியாவின் உதவியை கூறுவதால் எவ்வித பயனும் இல்லை என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமது நாட்டில் தோன்றிய பௌத்தத்தை மற்ற இடங்களிலும் வளர வேண்டும் என்றே இந்தியா விரும்பும் என்பதனால் இந்த விடயத்தில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு இந்தியாவின் ஆதரவு கிடைக்கும் என்பதில் சந்தேகமே என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த மயமாக்கலை கட்டுப்படுத்த இந்தியாவின் உதவியை கோருவதற்கு பதிலாக, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண உள்ளூர் நடவடிக்கைகளை எடுக்க தமிழ் அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வவுனியா – வெடுக்குநாரி ஆதிசிவன் கோவிலின் சிவலிங்கம் உடைக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களும் அரசியல்வாதிகளும் பௌத்த மயமாக்களை நிறுத்த கோரி போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
அத்தோடு யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றக் கோரி தற்போது போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.