”தமிழகத்தின் உரிமையை பறிக்கும் எந்த சட்டத்தையும் அ.தி.மு.க ஆதரிக்காது” என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இளநிலை மருத்துவப் படிப்பில் 85 சதவீத இடங்களையும், முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடங்களையும் மாநில அரசுகளே நிரப்பி வருகின்றன. மீதமுள்ள இடங்கள் மத்திய சுகாதாரத் துறையின் மருத்துவ கலந்தாய்வு குழு மூலம் நிரப்பப்படுகின்றன. மேலும், எய்ம்ஸ், ஜிப்மர், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களும் மருத்துவ கலந்தாய்வு மூலமே நிரப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ இடங்களையும் மருத்துவ கலந்தாய்வுக் குழுவின் மூலம் நிரப்ப மத்திய சுகாதாரத் துறை பரிந்துரைத்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ,” மருத்துவத் துறையிலும், மருத்துவக் கல்வியிலும், இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது.
இந்தியாவிலேயே மாநில நிதியில் உருவாக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகளையும், அதிகளவிலான இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ இடங்களையும் கொண்ட மாநிலமாக தமிழ் நாடு விளங்குகின்றது.
கடந்த 2011ஆம் ஆண்டு விடியா தி.மு.க ஆட்சியில் 1,945 ஆக இருந்த எம்.பி.பி.எஸ் மருத்துவ இடங்கள், 2021ஆம் ஆண்டு எமது ஆட்சியில் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களையும் சேர்த்து சுமார் 12,500-க்கும் மேலாக அதிகரிக்கப்பட்டது சாதனையாகும்.
அதுமட்டுமல்லாமல் எமது ஆட்சி ஒரே ஆண்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெற்று அதன்மூலம் 1,650 எம்.பி.பி.எஸ் மருத்துவ இடங்களை கூடுதலாகப் பெற்று சாதனை படைத்தது.
இதைக்கூட இந்த விடியா தி.மு.க அரசு தக்க வைத்துக்கொள்ள இயலாமல் தடுமாறிக்கொண்டிருப்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
எந்த நிலையிலும் தமிழ் நாட்டின் உரிமையைப் பறிக்கின்ற எந்த சட்டத்தையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரித்ததில்லை. நாடாளுமன்றத்தில் தேசிய மருத்துவக் குழுமம் சட்ட மசோதாவை கொண்டுவந்தபோதே கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
எனவே இதனை மறுபரிசீலனை செய்து மீண்டும் தற்போதுள்ள நடைமுறையிலேயே எம்.பி.பி.எஸ் மருத்துவ சேர்க்கையை நடத்த வேண்டும் என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் தேசிய மருத்துவக் குழுமத்தை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.