அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை எடுத்து சென்ற வழக்கில் கைதுசெய்யப்பட்டிருந்த அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டொனாட் ட்ரம்பை நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட ட்ரம்ப், தோல்வியைத் தழுவிய நிலையில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறி புளோரிடாவில் உள்ள தனது வீட்டில் குடியேறினார்.
இதன்போது ட்ரம்ப் நூற்றுக்கணக்கான ரகசிய ஆவணங்களை ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்காமல் தன்னுடன் எடுத்து சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் புளோரிடாவில் உள்ள ட்ரம்பின் வீட்டில் மத்திய புலனாய்வு பொலிஸார் அதிரடி சோதனையொன்றை நடத்தினர்.
இதன்போது ட்ரம்ப் வீட்டின் குளியலறையில் இருந்து 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. எனினும் இது பைடன் அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என ட்ரம்ப் சாடினார்.
இந்நிலையில் சட்டவிரோதமாக அரசு ரகசியங்களை எடுத்துச் சென்றுவிட்டு, அவற்றை அரசு மீண்டும் திரும்பப் பெறமுடியாத அளவுக்கு அழித்துவிட முயன்றார் என்பது உட்பட ட்ரம்ப் மீது 37 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று அவரது 77ஆவது பிறந்த நாளில் இவ் வழக்கு தொடர்பான விசாரணைக்காக மியாமி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இதன்போது இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு நபரான ட்ரம்பின் முன்னாள் உதவியாளர் வால்ட் நவுடாவும் ஆஜரானார்.
அவர்கள் இருவரையும் மியாமி நகர பொலிஸார் கைது செய்தனர்.
அவர்களது கை ரேகைகள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டன. அதே சமயம் ட்ரம்ப் வகித்த உயர் பதவியை கருத்தில் கொண்டு அவருக்கு கை விலங்கு பூட்டப்படவில்லை.
தொடர்ந்து நடந்த விசாரணையின் போது ட்ரம்ப் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஏற்க மறுத்து தான் குற்றமற்றவர் என வாதிட்டார்.
இதையடுத்து அரசு தரப்பின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ட்ரம்ப் மற்றும் வால்ட் நவுடா ஆகிய இருவருக்கும் எந்தவித நிபந்தனையும் இன்றி பிணை வழங்கி விடுவித்தார்.
அத்துடன் ட்ரம்ப் தனது முன்னாள் உதவியாளர் வால்ட் நவுடாவிடம் இந்த வழக்கு குறித்து நேடியாக ஆலோசனை நடத்த தடை விதித்த நீதிபதி விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.