பொலிஸ் காவலின்போது நிகழும் உயிரிழப்புக்கள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் விசனம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்கின்ற, தமது பணியை உரியவாறு நிறைவேற்றுவதற்குத் தவறுகின்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக வலுவான சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
மக்கள் பாதுகாப்பை முன்னிறுத்தி குற்றச்செயல்களைத் தடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸ் காவலின் கீழான உயிரிழப்புச்சம்பவங்கள் மீள நிகழாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான வழிகாட்டல்களைத் தயாரிக்குமாறும் அந்தச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் சட்ட முறைமையானது விசாரணை, வழக்குத்தொடுப்பு, தண்டனை வழங்கல் ஆகியவற்றை முன்னெடுப்பதற்கு உரியவாறான அதிகாரங்களை வழங்கியிருக்கின்றது.
ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியின் அடிப்படை அதுவே என்பதுடன் அந்தச் செயன்முறை மீதான நம்பகத்தன்மையும் வெளிப்படைத்தன்மையும் பாதுகாக்கப்படவேண்டியது மிகவும் அவசியமாகும் என்றும் குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிக்குக்கூட உயிர்வாழ்வதற்கான உரிமை உண்டு எனத் தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் சங்கம், பொலிஸ் காவலின் கீழான சந்தேகநபரின் உயிரிழப்பு அல்லது சட்டவிரோத படுகொலை என்பன உயிர்வாழ்வதற்கான உரிமையை மீறுகின்றது என்றும் தெரிவித்துள்ளது.
பொலிஸ் காவலின்கீழ் இடம்பெறும் உயிரிழப்புக்கள் மற்றும் சித்திரவதைகள் என்பன கரிசனைக்குரிய மட்டத்தில் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் சங்கம், மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மாத்திரம் அரசின் கடமையல்ல என்றும் மாறாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான இழப்பீட்டை வழங்குவதும், சட்டத்தை மீறுபவர்களைத் தண்டிப்பதும் அரசின் கடமையாகும் என்றும் வலியுறுத்தியுள்ளது.