அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், மைக்ரோசொப்ட்டின் ஸ்தாபகரும், பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன் அறக்கட்டளையின் தலைவருமான பில் கேட்ஸ் இன்று சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
கொரோனாக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் சீனாவிற்கு பல மேற்கத்திய தலைவர்கள் வருகை தந்தவண்ணம் உள்ளனர்.
குறிப்பாக அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஜேபி மோர்கன் சேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டிமோன், அப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது பில் கேட்ஸ் வருகை தந்துள்ளார். இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த பில்கேட்ஸ் ”மலேரியா மற்றும் காசநோய் ஒழிப்பிற்காக எடுக்கப்படும் முயற்சிகளுக்காக சீனாவிற்கு இந்த அறக்கட்டளை 50 மில்லியன்டொலர் வழங்கவுள்ளது.
அதுமட்டுமல்லாது பீஜிங் நகராட்சி மற்றும் ட்சிங்குவா பல்கலைகழகம் இணைந்து உருவாக்கிய உலகளாவிய ஆரோக்கியத்திற்கான மருந்து கண்டுபிடிப்பு நிறுவனம் (GHDDI) எனப்படும் அமைப்பிற்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கப்படும்.
இது மலேரியா மற்றும் காசநோய் போன்ற பெரும்பாலான உலகின் ஏழை மக்களை தாக்கும் நோய்கள் ஒழிப்பிற்காக எடுக்கப்படும் உயிர்காக்கும் சிகிச்சை முறைகள் மற்றும் ஆரோக்கிய மேம்பாட்டுக்கான வழிமுறைகளுக்கு இத் தொகை உறுதுணையாக இருக்கும்.
அதேசமயம் சீனாவிற்குள் வறுமை ஒழிப்பிலும், ஆரோக்கிய மேம்பாட்டிலும் சீனா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.
எனவே ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் சவால்களை சமாளிக்க சீனாவால் மிகப்பெரும் பங்காற்ற முடியும் ” இவ்வாறு தெரிவித்துள்ளார்.