ஜப்பானில் இராணுவ பயிற்சியின்போது 3 இராணுவ அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய ஜப்பானின் கிபு மாகாணத்தில் இராணுவத்தின் தரைப்படை பிரிவு வீரர்கள் 120 பேர் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதன்போது அங்குள்ள ஹினோ கிஹோன் துப்பாக்கிச்சூடு பயிற்சி தளத்தில் புதிதாக இணைந்த இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் 18 வயது வீரர் ஒருவருக்கு துப்பாக்கிச்சூடு பயிற்சி அளிப்பதற்காக இராணுவ அதிகாரிகள் 3 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
அதன்படி கடந்த சில நாட்களாக அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அதில் ஒரு இராணுவ அதிகாரியுடன் குறித்த வீரருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆத்திரமடைந்த வீரர் நேற்றை தினம் பயிற்சியின்போது குறித்த இராணுவ அதிகாரியை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அதனை தடுக்க முயன்ற 2 வீரர்களும் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்களும் உயிரிழந்தனர்.
இதனையடுத்து தாக்குதல் நடத்திய இராணுவ வீரரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து ஜப்பானின் ராணுவ தளபதி யசுனோரி மொரிஷிதா கூறுகையில், ஆயுதங்களை கையாளும் அமைப்பு இது போன்ற ஒரு சம்பவத்தை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
எனவே இந்த சம்பவத்தில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். மேலும் இந்த சம்பவத்தின் எதிரொலியாக நாடு முழுவதும் துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிமருந்து சம்பந்தப்பட்ட பயிற்சிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.