உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பாக நாட்டில் பல்வேறு தரப்பினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்ற போதிலும் அது குறித்து அரசாங்கம் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரு வழிக்கு என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையம் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவுக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உள்நாட்டு கடன் மறுசீரமைப்புத் திட்டம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால், நாட்டின் முக்கியமான பிரச்சினைகளில் அரசாங்கம் எப்போதும் பொறுப்புடன் செயல்பட்டு வருகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் நாடாளுமன்றத்தில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்தார்.
நம் நாட்டின் வங்கிக்கட்டமைப்பு, நிதிக்கட்டமைப்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாத மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிக்க அவசியமான மறுசீரமைப்பிற்கு உகந்த தீர்வுகளை அனைவரும் தேடுகின்றனர்.
இது தொடர்பாக, நாடு முழுவதும் பல்வேறு தகவல்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
இது குறித்து அரசாங்கம் இறுதித் தீர்மானம் எடுத்தவுடன், நாடாளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் அறிவிக்கத் தயாராக உள்ளது.
இது மிகவும் உணர்வுபூர்வமானதொரு விடயமாகும். இது சந்தை நிலைமையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, இந்த மறுசீரமைப்பு தொடர்பாக சந்தேகங்களை எழுப்பும் அறிக்கைகளை வெளியிடாமல் இருந்தால் தான், நமது நிதிச் சந்தையின் ஸ்திரத்தன்மையை நாம் தொடர்ந்து பராமரிக்க முடியும்.
ஜனாதிபதியின் பிரான்ஸ் விஜயத்தின் பின்னர் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சிறந்த புரிதல் ஏற்படும்.
எதிர்மறை 7.8 ஆக இருந்த பொருளாதார வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டின் இறுதியில் எதிர்மறை 3 ஆக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
ஆனால், அரசாங்கம் முன்னெடுத்து வரும் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் அதனை விடவும் சிறப்பான முன்னேற்றத்தை அடைய முடியும் என்ற பெரும் நம்பிக்கை உள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.