டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைப் பார்வையிட சுற்றுலாப்பயணிகளுடன் சென்ற ‘ஓஷன்கேட்‘ நிறுவனத்திற்குச் சொந்தமான Titan என்ற நீர்மூழ்கிக் கப்பல் கடந்த 18 ஆம் திகதி மாயமான நிலையில், 40 மணி நேரத்துக்கு குறைவான ஒட்சிசன் மட்டுமே அதில் இருப்பு உள்ளதாக அதிர்ச்சித் தகவலொன்று வெளியாகியுள்ளது.
குறித்த கப்பலில் பிரித்தானியாவைச் சேர்ந்த கோடீஸ்வரரும், ஆராய்ச்சியாளருமான ஹமிஷ் ஹார்டிங் உட்பட 5 பேர் அழைத்துச் செல்லப் பட்டிருந்த நிலையில், கப்பல் புறப்பட்டு 1 மணி நேரம் 45 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கப்பலைத் தேடும் பணியில் அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுவருவதோடு ,விமானங்கள், நீர்மூழ்கி கப்பல் போன்றவையும் இத் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஓசன்கேட் நிறுவனம் கூறுகையில், ”நீர்மூழ்கி கப்பலில் 40 மணி நேரத்துக்கு குறைவான ஒட்சிசன் இருப்பு மட்டுமே உள்ளது. எனவே கப்பலில் இருந்தவர்களை உயிருடன் மீட்க சிக்னல் துண்டிக்கப்பட்ட இடத்தை சுற்றிலும் தீவிர தேடுதல் வேட்டை இடம்பெற்று வருகின்றது. மேலும் இதற்கு அரசு மற்றும் ஆழ்கடல் நிறுவனங்கள் மிகுந்த ஒத்துழைப்பு அளித்து வருகின்றன” எனத் தெரிவித்துள்ளது.
கடந்த 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதி 22,00பேருடன் பயணித்த டைட்டானிக் கப்பலானது அட்லாண்டிக் கடல் பகுதியில் பனிமலையொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 1,600 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.