வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை வழங்கும் செயற்பாட்டின் பின்னணியில், அரசாங்கம் ஏதோ ஒரு விடயத்தை மூடிமறைக்க முற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வங்கிகளை அரசாங்கம் 5 நாட்களுக்கு மூடுவதன் நோக்கம், ஏதோ ஒரு விடயத்தை மறைப்பதற்காகத் தான்.
நான் மக்களால் நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்ட, கொழும்பு மாவட்டத்திலேயே அதிக படியான வாக்குகளைப் பெற்ற இரண்டாவது உறுப்பினராக உள்ளேன்.
கோப் குழுவின் உறுப்பினராகவும் உள்ளேன்.
ஆனால், வங்கிகளின் விடுமுறை தொடர்பாக எனக்கு தெரியாது. நாடாளுமன்றுக்கும் இது தொடர்பாக அறிவிக்கப்படவில்லை.
நாடாளுமன்ற நிதிக்குழுத் தலைவரிடமும் நான் இதுதொடர்பாக கேட்டிருந்தேன். அவருக்கும் தெரியாது.
ஜனாதிபதி இவ்வாறான விடயங்களை செய்வதில் கைத் தேர்ந்தவர். ஏதோ ஒரு விடயத்தை மூடி மறைக்கவே அவர் இவ்வாறு செயற்படுகிறார். நாம் இந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுபவர்கள்.
சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லவதற்கு ஜே.வி.பியினர் எதிர்ப்பினை வெளியிட்டார்கள்.
ஆனால், நாம் அதற்கு எதிரானவர்கள் அல்ல.
நாம் தான் முதலில் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வோம் என்று அறிவிறுத்தியிருந்தோம். அரசாங்கம் அங்கு சென்ற விதம் பிழையானது என்பதால்தான் அந்த செய்றபாட்டிலிருந்து நாம் ஒதுங்கினோம்.
ஐ.எம்.எப். இற்கு செல்ல அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முடியுமா? உலக வங்கிக்கு செல்ல டில்வின் சில்வாவுக்கு முடியுமா?
அல்லது, லால் காந்தவுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு செல்லதான் முடியுமா? இல்லை.
அங்கு எல்லாம் செல்லக்கூடிய நபர்கள் எமது அணியில்தான் உள்ளார்கள்.
ஜே.வி.பியை பொறுத்தவரை ஐ.எம்.எப்., உலக வங்கியிடம் செல்லதெல்லாம் தவறான காரியங்களாகும்.
தனியார் பல்கலைக்கழகங்கள் நாட்டுக்குள் வரவும் அவர்கள் எதிர்ப்பினைத் தான் வெளியிடுகிறார்கள்.
முதலீட்டாளர்கள் இங்கு வரவும் அவர்கள் எதிரானவர்கள். இங்கு முதலீடு செய்தவர்களையும் கப்பம் கோரி விரட்டியடித்தால், எவ்வாறு இந்த நாட்டை முன்னேற்றுவது?” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.