ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ரவுண்ட்-6 சுற்றுப்போட்டியில், சிம்பாப்வே அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
புலாவாயோ மைதானத்தில் நேற்று நடைபெற்ற ரவுண்ட்-6 சுற்றுப்போட்டியில், சிம்பாப்வே அணியும் ஓமான் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஓமான் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானிக்க முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 332 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சீன் வில்லியம்ஸ் 142 ஓட்டங்களையும் ஜோங்வே ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ஓமான் அணியின் பந்துவீச்சில், பயாஸ் பட் 4 விக்கெட்டுகளையும் பிலால் கான், கலிமுல்லாஹ் மற்றும் மக்சூத் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 333 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஓமான் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 318 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் சிம்பாப்வே அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, காஸ்யப பிரஜாபதி 103 ஓட்டங்களையும் அயான் கான் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
சிம்பாப்வே அணியின் பந்துவீச்சில், டெண்டாய் சட்டாரா மற்றும் பிளெஸிங் முஸாராபானி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ரிச்சர்ட் 2 விக்கெட்டுகளையும் சிகண்டர் ராஸா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 103 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 14 பவுண்ரிகள் அடங்களாக 142 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சீன் வில்லியம்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.