நடிகர் தனுஷ்,நடிகை அமலாப்பால் உள்ளிட்ட 14 நடிகர்கள் மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தேனாண்டாள் முரளி தலைமையிலான தயாரிப்பாளர் சங்கத்தினரால் அண்மையில் நடைபெற்ற பொதுக் குழுக்கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதன்போது தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய அல்லது முன் தொகை பெற்றுக் கொண்டு போல்ஷீட் வழங்காத நடிகர்கள் மீது சிவப்பு அட்டை விதிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
அதில் முதல் கட்டமாக சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, அதர்வா ஆகிய 5 பேருக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என முடிவெடுத்திருந்த நிலையில் குறித்த பட்டியலானது தற்போது 14 பேராக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் நடிகர் தனுஷ், நடிகைகள் அமலாபால், லட்சுமி ராய் உள்ளிட்டோரின் பெயர்கள் இணைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த 14 பேரிடமும் விளக்கம் கேட்டு ஒரு வாரத்திற்குள் பதில் அளிப்பதாக நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
மேலும் நடிகர், நடிகைகளின் தனியார் பாதுகாவலர்கள் மற்றும் ஒப்பனை கலைஞர்களுக்கு சம்பளம் வழங்கப்போவது இல்லை எனவும் முடிவெடுத்துள்ளனர்.
அத்துடன் நடிகர், நடிகைகளுக்கு சம்பளம் வழங்குவதிலும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அந்தவகையில் ஒரு படத்திற்கு ஒப்பந்தம் ஆகும்போது நடிகர் நடிகைகளுக்கு 10% மட்டுமே முன் தொகை வழங்கப்படும் எனவும் அடுத்ததாக படப்பிடிப்பில் இருந்து டப்பிங் வரை 60% தொகை சம்பளம் வழங்கப்படும் எனவும் இறுதியாக படத்தின் வெளியீட்டிற்கு முன்பு 30 சதவீதம் சம்பளம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.