மன்னார் மாவட்டத்தில் நகரப்பகுதிக்குள் எந்த ஒரு மதுபானசாலைக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்து இன்று மன்னார் நகர் பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பிரஜைகள் குழு, மகளீர் அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்தே இந்தப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
மன்னார் நகர மத்திய பகுதியில் ஆரம்பித்த இந்தப் போராட்டம் நகர பகுதி ஊடாக மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகம் வரை நீடித்தது.
மன்னாரில் உள்ள கத்தோலிக்க மற்றும் இந்து ஆலயங்கள், பாடாசாலை மற்றும் அதிக மக்கள் குடியிருப்பு அமைந்துள்ள பகுதியில் மதுபான சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இவ்வாறான பகுதிகளில் மதுபான சாலைக்கு அனுமதி வழங்குவதினால் அப்பகுதியில் விபத்துக்கள், முரண்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்புகள் காணப்படுவதாக போராட்டக்காரர்களினால் குற்றஞ்சாட்டப்பட்டது.
குறித்த போராட்டத்தில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர், இந்து ஆலய குருக்கள், சட்டத்தரணிகள், நகரசபை உறுப்பினர்கள், மெசிடோ நிறுவன ஊழியர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த போராட்டத்தின் இறுதியில் மதுபான சாலை அமைக்கு திட்டத்தை நிறுத்த கோரியும் மன்னார் நகர பகுதியில் மதுபான சாலைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்றும் வலியுறுத்தி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்புவதற்கான மகஜர் ஒன்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மன்னார் பிரதேச செயளாலரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.