சர்வக் கட்சி அரசாங்கமொன்று நாட்டில் அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் இருப்பதாக அக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பல அர்ப்பணிப்புக்களை செய்துள்ளார்.
அவர் அன்று தனது அதிகாரத்தின் ஊடாகத்தான் மஹிந்த ராஜபக்ஷவை வேட்பாளராக களமிறக்கிய காரணத்தினால்தான், அவர் நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
மைத்திரிபால சிறிசேனவையும் அவர்தான் வேட்பாளராக களமிறக்குமாறு தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் இணைந்து முன்னெடுத்த அந்த தேர்தல் செயற்பாடுகளுக்கும் அவர் தலைமைத் தாங்கினார்.
அவர் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ள வேண்டும் என்பதுதான் எமது விருப்பமாக உள்ளது.
அவர் கட்சிக்கு வந்தால் மீண்டும் எமது கட்சி பலமடையும் என்றே நாம் கருதுகிறோம். எவ்வாறாயினும், இதுதொடர்பான இறுதி முடிவை அவர்தான் எடுக்க வேண்டும்.
அதேநேரம், எமது கட்சியின் தலைவர், ஆரம்பத்திலிருந்தே சர்வக்கட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்தி வருகிறார்.
சர்வக்கட்சி அரசாங்கம் என்றால், ஒவ்வொரு கட்சியிலிருந்தும் ஒன்று, இரண்டு உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு ஆட்சி செய்வதல்ல.
தேசிய அரசாங்கத்திற்கும் சர்வக்கட்சி அரசாங்கத்திற்கும் இடையிலும் வித்தியாசம் உள்ளது.
தற்போதும் சுதந்திரக் கட்சியானது சர்வக்கட்சி அரசாங்கமொன்று அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில்தான் உள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.