வடக்கில் சீனித் தொழிற்சாலை அமைப்பது என்பது தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அபிவிருத்தி என்ற பெயரால் நிரந்தரமாகவே கையகப்படுத்தும் ஒரு தந்திரமுமாகும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.
வவுனியாவில் சீனித்தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கரும்புச் செய்கைக்கும் சீனித்தொழிற்சாலைக்கும் ஒதுக்கப்பட்ட காணியின் அளவு வவுனியாவின் மொத்தப்பரப்பில் ஆறு விழுக்காடுக்கும் அதிகம். இந்தப் பாரிய இடத்தைக் காடுகளை அழித்தே பெறமுடியும்.
காலநிலை மாற்றங்களால் பாதிக்கப்படப்போகும் நாடுகளது பட்டியலில் இலங்கையும் அடங்கியுள்ள நிலையில் அதனைக் கருத்திற் கொள்ளாது காடுகளை அழித்து சீனித் தொழிற்சாலையை அமைப்பது குருட்டுத்தனமான முடிவாகும்.
இது தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அபிவிருத்தி என்ற பெயரால் நிரந்தரமாகவே கையகப்படுத்தும் ஒரு தந்திரமுமாகும்.
சீனித்தொழிற்சாலை சிங்களக் குடியேற்றத்துக்கும் வித்திடும் என்ற சந்தேகமும் உள்ளது. மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் நோக்கம் விவசாயத்தை மேம்படுத்தல் என்று சொல்லப்பட்டபோதும் அதன் உள்ளார்ந்த நோக்கம் சிங்களக் குடியேற்றமாகும்.
தமிழ் நிலமான கந்தளாயை இன்று முற்றுமுழுதாக சிங்களவர்களின் நிலமாக்கியது. வவுனியாவிலும் கரும்புக்கு நீர்பாய்ச்சுகிறோம் என்று சொல்லி வவுனியாவின் குளங்களோடு மகாவலியைத் தொடுத்து நிலங்களை மகாவலி அதிகாரசபை தன்வசமாக்கலாம். மகாவலியில் நீர்வரத்து இருக்கிறதோ இல்லையோ இதனூடாகச் சிங்களக் குடியேற்றம் வருவதற்கான வாய்ப்பு மிக அதிகமாகவே உள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட எம்மக்களின் வாழ்வை மேம்படுத்த அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது அவசியம். ஆனால், வடக்கின் மண்ணுக்கும் மக்களுக்கும் பொருத்தமான அபிவிருத்தித் திட்டங்கள் எத்தனையோ இருக்கும்போது எவ்வித்திலும் பொருந்தாத சீனித் தொழிற்சாலையை வரவேற்பது அறிவுடையோரினதோ, தமிழ்த் தேசியப் பற்றாளர்களினதோ செயலாக இருக்காது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.