க.பொ.த. உயர்தர பரீட்சையை இவ்வாண்டு இறுதியிலும், க.பொ.த. சாதாரணதர பரீட்சையை அடுத்தாண்டு முதல் காலாண்டிலும் நடத்த பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “2020, 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா தொற்றின் காரணமாக, 50-60 வீதமான பாடசாலைகளை மூடவேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இதனால், கற்பித்தல் நடவடிக்கையும் பாதிக்கப்பட்டது. தற்போது க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்து வருகிறோம்.
இந்த செயற்பாடு நிறைவடைந்தவுடன், க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இவ்வருட இறுதிக்குள் க.பொ.த. உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கும் நாம் தீர்மானித்துள்ளோம்.
அத்தோடு, அடுத்தாண்டு முதல் காலாண்டில் க.பொ.த. சாதாரணதர பரீட்சையை நடத்தவும் பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டிசம்பர் நடத்த வேண்டிய இந்த பரீட்சையே 2024 ஆம் ஆண்டு முதல் காலாண்டுவரை பிற்போடப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.