தரமற்ற மருந்துகளால் நாட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை பொறுப்புக்கூற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று இதுதொடர்பாக உரையாற்றிய அவர், இவ்வாறான சம்பவற்கள் தொடர்பாக அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “தரமற்ற மருந்துகளால் எமது நாட்டில் பலர் உயிரிழந்துள்ளார்கள்.
பேராதனை வைத்தியசாலையில் தரமற்ற மருந்தினால் ஒருவர் உயிரிழந்த நிலையில், நேற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காலி, பொரலுகெட்டிய தெற்கு, கொஸ்கொட பலப்பிட்டிய பகுதியில் வசிக்கும், இமாலி பிரியதர்ஷினி வீரசிங்க என்ற பெண், எனஸ்டோல் எனும் பெயர் உடைய ப்ரோபபோல் மருந்தினால் உயிரிழந்துள்ளார்.
நான் சபையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ப்ரோபபோல் மருந்து தொடர்பாக எச்சரிக்கை விடுத்திருந்தேன்.
இவ்வாறான மூன்று வகையான தரமற்ற, சுகாதாரத்திற்கு ஏற்புடையதல்லாத மருந்துகள் தொடர்பாக நான் கூறியபோது, அவை சிறந்த மருந்துகளாகும் என்று சபையில் வைத்து சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
இப்போது நேற்றும் இந்த மருந்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். தரமற்ற மருந்துகளுக்கு அரசாங்கம் ஆதரவளிக்கிறதா?
தரமற்ற மருந்துகள் தொடர்பாக முறையிட ஒரு இடம் இல்லை. இதுதொடர்பாக ஆராய ஒரு நிறுவனம் இல்லை.
தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை என்பது, திருடர்களின் கூடாரமாக மாறியுள்ளது.
தலைவரும், நிர்வாக அதிகாரியும் இவற்றுக்கு பொறுப்புக்கூறியே ஆகவேண்டும். நேற்று ஒரு தாய் இறந்துள்ளார்.
இந்த இறப்புக்கு நஷ்ட ஈடு கொடுப்பதால் மட்டும், அவரது பிள்ளைகளும் கணவரும் சிறப்பாக வாழ்ந்துவிடுவார்களா?
எனவே, இதுதொடர்பாக அரசாங்கம் தீவிரமான நடவடிக்கையொன்றை மேற்கொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.