அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நிறைவின் போது தனது இரண்டாவது இன்னிஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்ரேலிய அணி 4 விக்கெட்களை இழந்து 116 ஓட்டங்களை பெற்றுள்ளது.
அவ்வணி சார்பாக டிராவிஸ் ஹெட் 18 ஓட்டங்களுடனும் மிட்செல் மார்ஷ் 17 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர்.
ஹெடிங்லி, லீட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, அவுஸ்ரேலிய அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய அவுஸ்ரேலிய அணி முதல் இன்னிஸிற்காக அனைத்து விக்கெட்களையும் இழந்து 263 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக மிட்செல் மார்ஷ் 118 ஓட்டங்களையும் டிராவிஸ் ஹெட் 39 ஓட்டங்களையும் அதிகமாக பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் இங்கிலாந்து சார்பாக மார் வூட் 5 விக்கெட்களை சாய்த்தார்.
இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்க்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணியால் 237 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.
அவ்வணி சார்பாக பென் ஸ்டோக்ஸ் 80 ஓட்டங்களை குவித்தார். பந்துவீச்சில் அவுஸ்ரேலிய அணி சார்பாக பட் கம்மின்ஸ் 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
தற்போது 142 ஓட்டங்கள் முன்னிலையோடு இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை அவுஸ்ரேலிய அணி தொடரவுள்ளது.