முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி சர்வதேச நியமங்களுக்கு அமைய அகழப்பட வேண்டும் என வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அல்லது சர்வதேச நிபுணத்துவம் பெற்றவர்களை கொண்டு சர்வதேச நியமங்களுக்கு அமைய மேற்கொள்ளப்படவில்லை என பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், இதற்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இன்று கவலை கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இதன்போது, இங்கு கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் இறுதி யுத்தத்தின்போது சரணடைந்தவர்களுடையதாக இருக்கலாம் என்றும் அகழ்வுப் பணிகள் சர்வதேச நியமங்களுக்கு முரணாக இடம்பெறுவதாகவும் உறவுகள் தெரிவித்தனர்.
எனவே, சர்வதேச நிபுணத்துவம் பெற்றவர்களை கொண்டு சர்வதேச தலையீட்டுடன், சர்வதேச கண்காணிப்புக்கு மத்தியில் இந்தச் செயற்பாடு இடம் பெறவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.