நாட்டைக் கட்டியெழுப்ப நிதி ஒழுக்கம் இன்றியமையாதது எனவும், அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதுடன் அரசாங்க வருமானத்தை ஈட்டுவதற்கான முறையான புதிய வழிமுறைகள் உடனடியாக அறிமுகப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக புதிய வருமான வழிகளை உருவாக்குவதற்கான மூலோபாயங்களைக் கண்டறிவதற்காக நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்க மற்றும் கலால் திணைக்களங்கள் என்பவற்றின் வருமான இலக்குகளை அடைவதற்கான முறையான சூழலை உருவாக்குதல், அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கான புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் அதற்கான டிஜிட்டல் பொருளாதார பின்னணியை தயார் செய்தல் தொடர்பான முன்மொழிவுகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த முன்மொழிவுகள் குறித்து மேலும் கலந்துரையாடி, இதனை நாடாளுமனற் முறைமைகள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இராஜாங்க அமைச்சருக்கு பணிப்புரை விடுத்தார்.
அத்துடன், இந்த முன்மொழிவுகளை அமுல்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்திய ஜனாதிபதி, பரந்த ஊடகப் பிரச்சாரத்தின் ஊடாக இது தொடர்பாக முறையாக மக்களுக்கு அறிவிக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.
வரி வருமானம் முறையாக வசூலிக்கவில்லை என்பது தான் இன்றைய பொருளாதார நெருக்கடியில் முன்வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வருமான வரி செலுத்த வேண்டிய சில தரப்பினர் வருமான வரி செலுத்துவதில்லை என்று குற்றஞ்சாட்டினார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முயற்சிக்கும் இந்த சமயத்தில், நாட்டில் முழுமையான நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முதலில் அரச செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்தோடு, அரச வருவாயை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி, வருமான வரியை உயர்த்த புதிய வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றுமு; குறிப்பிட்டார்.
ஆங்கிலேயர்கள் இந்த நாட்டிற்கு வந்த பிறகு, அவர்கள் வருவாய் சேகரிப்பில் அதிக கவனம் செலுத்தினர்.
அதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். முழுப்பிரதேசமும் தனியொரு முகவரின் கீழ் ஆளப்பட்டபோது, வருவாய்த்துறை அதிகாரிகளும், உள்ளூர் அதிகாரிகளும், வர்த்தகர்களும், வருவாய் சேகரிப்பதில் தனிக் கவனம் செலுத்தினர்.
அதனால், எந்த சந்தர்ப்பத்திலும் வருமானம் குறையவில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தற்போதுள்ள வருமான வழிகளை நெறிப்படுத்துவதற்கும், மக்களுக்கு சுமை ஏற்படாத வகையில் புதிய வருமான வழிகளை அறிமுகப்படுத்தி குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால முன்மொழிவுகளை உள்ளடக்கி ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.