உலகின் மிகவும் பழமையான மொழி ‘தமிழ் மொழி‘ என்றும் பிரான்சில் விரைவில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் எனவும் இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸின் தேசிய தினம் இன்று (வெள்ளிக் கிழமை) கொண்டாடப்பட்டுவரும் நிலையில் அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் மோடி நேற்று பிரான்ஸ் சென்றிருந்தார்.
இந்நிலையில் இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த உரையில் அவர் தெரிவித்ததாவது” வெளிநாட்டில் பாரத் மாதா கீ ஜே என்கிற முழக்கத்தைக் கேட்கும்போது, நான் சொந்த மண்ணில் நிற்பதைப் போல உணர்கிறேன். நான் பலமுறை பிரான்ஸ் வருகை தந்துள்ளேன். ஆனால் இம்முறை எனது வருகை சிறப்பானது.
இப்போது பிரான்சின் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. பிரான்ஸ் மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை அழைத்த பிரான்ஸ் மக்களுக்கு நன்றி. இது இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான பிரிக்க முடியாத நட்புறவின் பிரதிபலிப்பாகும்.
ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், 10 முதல் 15 ஆண்டுகளில் 42 கோடி இந்தியர்கள் வறுமை கோட்டில் இருந்து மேலே கொண்டுவரப்பட்டுள்ளனர் என கூறியிருக்கிறது.
இந்த எண்ணிக்கை ஐரோப்பாவின் மக்கள்தொகையை விட அதிகம், அமெரிக்காவின் மக்கள்தொகையை விட அதிகம். உலகின் பழமையான மொழி தமிழ். உலகின் மிகப் பழமையான மொழி இந்திய மொழி என்பதில் மிகப் பெரிய பெருமை எமக்கு உண்டு. பிரான்ஸ் நாட்டில் இந்தியாவின் சார்பாக திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும்.
பிரான்ஸில் திருவள்ளுவர் சிலையை அமைப்பது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை. 100 ஆண்டுகளுக்கு முன்பு, பிரான்சுக்கான யுத்தத்தில் இந்திய வீரர்கள் ஈடுபட்டனர். பிரெஞ்சு மண்ணில் நிகழ்ந்த யுத்தத்தில் பங்கேற்று பிரெஞ்சு மண்ணில் இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இங்கு நடந்த போரில் பங்கேற்ற படைப்பிரிவுகளில் ஒன்றான பஞ்சாப் ரெஜிமென்ட் பிரான்ஸின் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்க உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.
அத்துடன் இந்தியா தற்போது G20 கூட்டமைப்பின் தலைமைத்துவ பாத்திரம் வகிக்கிறது. இந்தியாவில் சந்திரயான் விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டன் பணி தொடங்கியுள்ளது. இன்னும் சில மணிநேரங்களில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப் படவுள்ளது.
பருவநிலை மாற்றம், தீவிரவாதம் அல்லது தீவிரவாத எதிர்ப்பு என எதுவாக இருந்தாலும், உலகம் இந்தியாவையே உற்றுப் பார்க்கிறது. எனது ஒவ்வொரு நொடியும் நமது நாட்டு மக்களுக்கானது என்று தீர்மானித்துள்ளேன் ” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.