குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொங்கல் வழிபாடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பெரும்பான்மையினரும், பிக்குகளும், பொலிசாரும் இடையூறு ஏற்படுத்தியதால் குறித்த பிரதேசத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
பொங்கல் விழாவிற்கு அனுமதி கோரி நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதற்கு நீதிமன்றமும் அனுமதி வழங்கியிருந்தது.
இந்த நிலையில் பொங்கல் விழாவிற்காக தழிழ் மக்கள் சென்ற போது அதிகளவான பௌத்த பிக்குகள் குவிக்கப்பட்டிருந்தனர்.
பொங்கல் வைப்பதற்கு தயாரான போது, முல்லைத்தீவு பொலிஸார் தடையேற்படுத்தியுள்ளனர்.
குறித்த இடத்தில் தீயிட்டு பொங்கல் செய்ய முடியாது என தழிழ் மக்களை பிக்குகள் மற்றும் பெரும்பான்மையினர் தடுத்துள்ள நிலையில் குறித்த பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.
இந்த நிலையில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தொல்பொருள் திணைக்களத்தினரை தமிழ் தரப்பினர், நாடியபோது நீதிமன்ற அனுமதிப்படி பொங்கல் மேற்கொள்ள அனுமதிக்கும்படி கேட்டுள்ளனர்.
நிலத்தில் தீ மூட்டாமல், தகரம் வைத்து அதன்மேல் கல் வைத்து தீமூட்டுமாறு தொல்பொருள் திணைக்களத்தினர் அறிவித்துள்ளனர்.
தொல்பொருள் திணைக்களத்தினர் வழங்கிய அறிவித்தலை அங்கு குவிக்கப்பட்டிருந்த பொரிஸார் மற்றும் பிக்குகள் அனுமதிக்கவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பொங்கல் வைக்காமல் பூஜை வழிபாடுகளை மாத்திரம் மேற்கொண்டு தழிழ் மக்கள் கலைந்து சென்றுள்ளனர்.
இதேவேளை குறித்த பகுதியில் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பகுதிகளைச் சேர்ந்த தழிழ் தரப்பினரை இணைத்து இந்து ஆலயம் ஒன்று அமைப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் இதனால் இன பிரச்சினை ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் கல்கமுவ சாந்தபோதி தேரர் கடந்த புதன்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்திருந்தார்.
இந்த நிலையில் இன்று இடம்பெறும் பூஜை வழிபாடு நிகழ்விற்கு எதிராக அனைத்து சிங்கள மக்களும் ஒன்றிணைய வேண்டும் என அவர் தனது முகநூலில் பதிவிட்டிருந்ததாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.