இலங்கையை பொருளாதார ரீதியாகவும், பௌதீக ரீதியாகவும் அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்தின் மற்றும் வர்த்தக சமூகத்தினரின் ஆதரவு தொடர்ந்தும் வழங்கப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்தார்.
கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று நடைபெற்ற இந்திய வர்த்தகர்களுடனான விசேட சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் நீண்ட காலமாக இலங்கையில் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்த வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவுப் பாலத்தை உருவாக்க முடிந்துள்ளது.
அது இலங்கை மக்களுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்தும் என நான் நம்புகிறேன். இலங்கை மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் அந்த மக்களுடன் இந்தியா இருந்தது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியின் போது இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு இந்திய அரசாங்கம் உட்பட வர்த்தக சமூகம் உதவிகளை வழங்கியது.
இலங்கை, தற்போது நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறது என்றே கூற வேண்டும்.
நிதி நெருக்கடியின் போதும், இந்திய வர்த்தகர்கள் இலங்கையில் வியாபாரங்களை ஆரம்பித்து இலங்கையின் நிதி நிலைமை நன்றாக உள்ளது என்ற செய்தியை உலகுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுத்தார்கள்.
இலங்கையில் வர்த்தகம் செய்யும் இந்திய வர்த்தகர்களுக்கு கடந்த 40 ஆண்டுகளாக இலங்கையில் உள்ள அரசாங்கங்களின் ஆதரவு கிடைத்துள்ளது.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அவ்வாறே ஆதரவளித்துள்ளார்.
இலங்கையை பொருளாதார ரீதியாகவும், பௌதீக ரீதியாகவும் அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்தின் மற்றும் வர்த்தக சமூகத்தினரின் ஆதரவு வழங்கப்படும் என்பதை இங்கு நினைவுகூர்கிறேன்.
இது இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு வழங்கப்படும் வாக்குறுதி என்றே கூற வேண்டும்.- என்றார்.