சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றை கொண்டுவரவுள்ளதாக அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும தெரிவித்தார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், மருந்து ஒவ்வாமைக் காரணமாக நாட்டில் இன்று பலர் உயிரிழந்துள்ளார்கள்.
இதுதொடர்பாக அரசாங்கத்திடம் வினவினால், இது சாதாரண ஒரு நிகழ்வு என்று சுகாதார அமைச்சர் பதில் வழங்குகிறார்.
மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டு, அமைச்சராக உள்ள இவரின் இந்த பதிலை ஏற்றுக் கொள்ள முடியுமா?
தனது உறவினர்கள் ஊடாகவே, இவர் நாட்டுக்கு மருந்துகளைக் கொண்டுவருகிறார் என்று பலராலும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
ராஜபக்ஷக்கள் எவ்வாறு தங்களின் உறவினர்களை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்தார்களோ, அதேபோன்றுதான் சுகாதார அமைச்சரும் தற்போது நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
மக்களுக்கு தரமான சுகாதார சேவையை வழங்க முடியாவிட்டால், சுகாதார அமைச்சர் உடனடியாக பதவிலியிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம்.
அப்படி செய்யாவிட்டால், எதிர்க்கட்சியினராகிய நாம் சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை நாடாளுமன்றுக்கு கொண்டுவந்து, அவரை பதவியிலிருந்து வெளியேற்றுவோம்.
நாட்டில் வைத்தியர்களின் பற்றாகுறை நிலவுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலைகள் மீதான நம்பிக்கை குறைவடைந்துக் கொண்டும் செல்கிறது.
இவையணுத்துக்கும் சுகாதார அமைச்சர் பொறுப்புக்கூற வேண்டும்.
இதனை அவர் மேற்கொள்ள தவறுவாறாயின், கோட்டாபய ராஜபக்ஷவை மக்கள் எவ்வாறு விரட்டியடித்தார்களோ, அதே நிலைமைதான் இவருக்கும் ஏற்படும்.
அதற்கு முன்னர், எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவந்து அவரை பதவியிலிருந்து வெளியேற்றும்.” என்றார்