அரச வைத்தியசாலைகளில் கடந்த சில நாட்களுக்குள் ஏற்பட்டுள்ள மரணங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள ஐந்து பேர் கொண்ட குழுவொன்றை சுகாதார அமைச்சர் அறிவிக்கவுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நிபுணர் குழுவில், மருத்துவம், செவிலியர், ஒவ்வாமை ஆகிய இரண்டிலும் விரிவான அறிவும் புரிதலும் உள்ள பேராசிரியர்கள் உட்பட 5 பேர் இடம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவானது அரச மருத்துவமனைகளில் நடந்த அனைத்து சர்ச்சைக்குரிய மரணங்கள் குறித்தும் முழு விசாரணை நடத்தி அமைச்சரிடம் அறிக்கை சமர்பிக்கவுள்ளது.
இந்தக் குழுவினால் வழங்கப்படும் அறிக்கை நாட்டில் உள்ள வைத்தியசாலை அமைப்பில் உள்ள மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்கு உதவிகரமாக இருக்கும் என சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்பதே சுகாதாரத்துறையின் எதிர்பார்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு, நோயாளர்களுக்கு வைத்தியசாலைகளினால் வழங்கப்படும் சுகாதாரம் சீர்குலைந்திருக்கவில்லை எனவும் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார்.