ஈரானின் தலைநகரான பாக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகமானது நேற்று அதிகாலை 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது.
சுவீடனில் அண்மையில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு எதிராக இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுவீடனில் கடந்த மாதம் 28ஆம் திகதி சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமின் மையப் பகுதியில் உள்ள மசூதி அருகில், 37 வயதான ஈராக்கிய அகதி ஒருவர் குர்ஆன் நூலை கிழித்து எறிந்ததுடன், அவற்றைத் தீயிட்டும் கொளுத்தினார்.
இச்சம்பவமானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் இஸ்லாமிய நாடுகள் பலவும் சுவீடன் அரசுக்கு எதிராக தமது கண்டனங்களைத் தெரிவித்து வந்தன.
இந்நிலையிலேயே நேற்றைய தினம் சுவீடன் தூதரகம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் இத்தாக்குதல் சம்பவத்தில் தூதரக அதிகாரிகள் பாதிக்கப்படவில்லை எனவும் அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் எனவும் சுவீடன் வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது சுவீடன் தூதர் ஜெசிக்காவும்(Jessica Svärdström) ஈராக்கை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.