“இன்று நாம் நடத்திய கலந்துரையாடல் இலங்கை-இந்தியாவின் அடுத்த 25 வருடங்களுக்கான அடித்தளத்தை இடும்” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓர் இந்திய ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான தனது இரு நாள் விஜயத்தைக் குறித்து அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தலைவர்கள் இந்தியாவிற்கு போகும்பொழுது இதுபோல கவர்ச்சியான பல பிரகடனங்களை வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் நடைமுறையில் அவை செயலுக்கு வந்ததில்லை. ஏனெனில் யதார்த்தத்தில் இலங்கைத் தீவுக்குள் சீனா கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு நிற்கப் போகின்றது. அம்பாந்தோட்டையில் 99 ஆண்டு கால குத்தகையை அது பெற்று விட்டது. துறைமுகப் பட்டினத்திலும் சீனா நிரந்தரமாகக் காணப்படும். இந்நிலையில் இந்தியாவுடனான உறவில் 25 ஆண்டுகள் என்று கூறப்படுவதை எப்படிப் பார்ப்பது?
ரணிலுடைய விஜயத்தின் முடிவில் இந்திய வெளியுறவுச் செயலர் தெரிவித்த தகவல்களின்படி, இந்தியா மேலும் புதிய பிணைப்புத் திட்டங்களில்- கனெக்ரிவிற்றி-ஆர்வம் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.இப்பிணைப்புத் திட்டங்களை இலங்கையே முன்மொழிந்ததாகவும் கருதப்படுகிறது.
ஆனால் ஏற்கனவே வடக்குக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையிலான பிணைப்புத் திட்டங்கள் என்று கூறித் தொடக்கப்பட்ட பலாலிக்கும் மீனம்பாக்கத்திற்கும் இடையிலான விமான போக்குவரத்து,காங்கேசன் துறைக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையிலான கடல் வழி, மன்னருக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையிலான கடல் வழி,யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள கலாச்சார மண்டபம் போன்ற விடயங்களில் எதிர்பார்த்த வேகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்களைப் பெற முடியவில்லை. பலாலி விமான நிலையத்தின் ஓடு பாதை சிறியது. அதனால் அங்கே சிறிய விமானங்கள்தான் தரையிறங்கலாம். அச்சிறிய விமானங்களில் 20 கிலோ ஏடையுள்ள பொருட்களைத்தான் கொண்டு வரலாம். இதனால் வர்த்தகர்கள் அந்த சேவையை பயன்படுத்த மாட்டார்கள்.புலம்பெயர்ந்த தமிழர்களும் அதைப் பயன்படுத்தத் தயங்குவார்கள். எனவே அது ஒரு முழுமையான கனெக்டரிவிட்டி அல்ல.
அப்படித்தான் கடல் வழிப் போக்குவரத்துக்களும். அவை யாவும் விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டாலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக “திருநாளைப் போவாரின்” கதைதான். அடுத்தது கலாச்சார மண்டபம் அதை கட்டித் திறந்துமாயிற்று.ஆனால் அதனை நிர்வாகிப்பதற்கு உரிய கட்டமைப்புகள் இதுவரையிலும் ஏற்படுத்தப்படவில்லை.அதை யாரிடம் நிர்வகிக்க கொடுப்பது என்ற விடயமும் இதுவரையிலும் முடிவெடுக்கப்படவில்லை. இப்படித்தான் இருக்கிறது இந்தியாவுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான பிணைப்புத் திட்டங்கள்.
இந்நிலையில் புதிய பிணைப்புத் திட்டங்களைக் குறித்து ரணில் விக்கிரமசிங்கவின் விஜயத்தின் போது உரையாடப்பட்டிருக்கிறது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அல்லது ஈழத் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பிணைப்புத் திட்டங்கள் தொடர்பாக ஏன் அதிகம் உரையாடப்படுகிறது? ஏனெனில் இந்து சமுத்திரத்தில் இந்தியாவுக்கு அருகே இருப்பதான இலங்கைத் தீவின் புவியியல் அமைவிடந்தான் அதற்கு காரணம். இந்த புவியியல் அருகாமை-geographical proximity-காரணமாகத்தான் இந்தியா ஈழப்போரில் தலையிட்டது. ஈழப் போர் தமிழகத்துக்குள் நுழைந்தது.அது பழைய கதை. புதிய கதை என்னவென்றால்…. தமிழகத்துக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான பிணைப்புத் திட்டங்கள் என்று கூறி கடந்த 14 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட மேற்கண்ட திட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.அல்லது இதுவரை தொடங்கப்படவே இல்லை. இந்நிலையில் புதிய பிணைப்பு திட்டங்களின் நோக்கம் என்ன?
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான புவியியல் அருகாமை என்பது தமிழ் மக்களுக்கும் பொருந்தும்; சிங்கள மக்களுக்கும் பொருந்தும். ஆனால் பண்பாட்டு அருகாமை,இன அருகாமை என்று பார்க்கும் பொழுது தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான புவியியல் அருகாமைதான் அதிகம் இரத்தோட்டமானது;நெருக்கமானது.அந்த அருகாமை ஈழப் போரின் விளைவாக இப்பொழுது அதிகம் சோதனைக்கு உள்ளாகியிருக்கிறது. குறிப்பாக ஈழப்போரின் முடிவுக்கு பின்னரான கடந்த 14 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அருகாமை என்பது ஒப்பீட்டளவில் அதிகம் சோதனைக்கு உள்ளாகி வருகிறது. எனினும் ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் இடையிலான புவியியல் அருகாமைதான் இலங்கை இன விவகாரத்தில் இந்தியா எப்பொழுதும் தலையிடுவதற்குரிய பிரதானமான பிடி ஆகும்.
அதேசமயம் வடஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பண்பாட்டு பிணைப்புகளைக் குறித்த உரையாடலும் உண்டு. இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக இருப்பவரும் அமைச்சரவை அந்தஸ்தைப் பெற்றவருமாகிய மிலிந்த மொரோகொட அவ்வாறு பௌத்தத்துக்கும் வட இந்தியாவுக்கும் இடையிலான பிணைப்புகளை புதிய திட்டங்களின் மூலம் ஒப்பிட்டுளவில் நெருக்கமானதாக்க முயற்சிக்கின்றார். ஆனால் இங்கே ஒரு வரலாற்று அனுபவத்தை சுட்டிக் காட்ட வேண்டும்.புவியியல் அருகாமை என்று பார்க்கும் பொழுது,அது தமிழர்களுக்கும் சிங்களவருக்கும் பொருந்தும். எனினும் கடந்த 14 ஆண்டுகளில் கொழும்பில் இருந்த சிங்கள ஆட்சியாளர்கள் அந்த புவியியல் அருகாமையை அதிகம் சோதனைக்கு உள்ளாக்கி வந்திருக்கிறார்கள்.சீனாவுக்கு அம்பாந்தோட்டையை கொடுத்தமை, துறைமுகப் பட்டினத்துக்கு அனுமதி வழங்கியமை போன்றவற்றின் மூலம் இச்சிறிய தீவை சீன விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றியிருக்கிறார்கள். இந்த விடயத்தில் சிங்களத் தரப்பு இந்தியாவுடன் தனது புவியியல் அருகாமையைப் போற்றவில்லை; மதிக்கவில்லை; கொண்டாடவில்லை.அதைச் சோதனைக்குள்ளாக்கும் விதத்தில்தான் நடந்திருக்கிறது.
அதேசமயம்,தமிழகத்தில் இடம்பெற்ற ராஜீவ் காந்தி படுகொலை உள்ளிட்ட படுகொலைகளின் விளைவுகள், மற்றும் இறுதிக்கட்டப் போரில் கலைஞர் கருணாநிதி நடந்து கொண்ட விதம், இந்தியா நடந்து கொண்ட விதம் போன்றவற்றின் திரட்டப்பட்ட விளைவாக, ஈழத் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பிணைப்புகளை அதிகம் கேள்விக்கு உள்ளாக்கி இருக்கின்றன.
எனினும் அதற்காக தமிழ் மக்கள் சீனாவை நோக்கிப் போகவில்லை. அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்கள் சீனாவை நோக்கிப் போவதில் அடிப்படையான வரையறைகள் உண்டு.புவியியல் அருகாமை மட்டுமல்ல, பண்பாட்டு அருகாமையும் இல்லை. இனத்துவ அருகாமையும் இல்லை. அருகில் உள்ள தமிழகத்தைத் தாண்டி சீனாவை நோக்கி செல்வதில் தமிழ் மக்களுக்கு அடிப்படையான உளவியல் தடைகள் உண்டு. புவியியல் தடைகளும் உண்டு. மேலும் தமிழகத்தில் இதுவரையிலும் 19 பேர் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்திருக்கிறார்கள். அவர்களில் எவருமே திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்களை கேட்டோ, அல்லது பலாலி விமான நிலையத்தை திறக்குமாறு கேட்டோ, அல்லது காங்கேசன் துறையிலிருந்து படகை விடச் சொல்லிக் கேட்டோ,அல்லது கலாச்சார மண்டபத்தைக் கேட்டோ தீக்குளிக்கவில்லை. எனவே அவர்களுடைய சாம்பலைக் கடந்து சீனாவை நெருங்க ஈழத் தமிழர்களால் முடியுமா?
சீனா யுத்த காலத்திலும் இலங்கை அரசாங்கத்தின் பக்கம் நின்றது. இப்பொழுது ஐநாவிலும் இலங்கை அரசாங்கத்தை ஆதரிக்கின்றது. அது அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்பு சார் உறவு.ஆனால் ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் இடையிலானது இன அருகாமை; மொழி அருகாமை; பண்பாட்டு அருகாமை.இவற்றைப் பயன்படுத்தித்தான் இந்தியா இனப்பிரச்சினையில் தலையிட்டது.முடிவில் இந்தியா அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்பு சார் உறவின் அடிப்படையில் ஒரு உடன்படிக்கையை எழுதிக் கொண்டது.
ஈழத் தமிழர்கள் இந்தியாவோடான தமது புவியியல் அருகாமையைத் தாண்டி சீனாவை நெருங்கவில்லை. ஆனால் அரசுடைய தரப்பாகிய சிங்கள மக்கள் தூரத்தில் இருந்த சீனாவை அம்பாந்தோட்டையில் கொண்டு வந்து அமர்த்தி விட்டார்கள். கொழும்புத் துறைமுகத்தில் கொண்டு வந்து அமர்த்திவிட்டார்கள். எனவே புவியியல் அருகாமை என்று பார்க்கும் பொழுது சிங்கள மக்கள் இந்தியாவுடனான புவியியல் அருகாமையை பொருட்படுத்தவில்லை; மதிக்கவில்லை.
இவ்வாறான ஒரு புவிசார் அரசியல் பின்னணியில்,இந்தியா புதிய பிணைப்புத் திட்டங்களைக் குறித்து ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது. இந்த பிணைப்பு திட்டங்களில் முக்கியமானவை தரைவழிப் பாலம் ஒன்றை அமைப்பதற்கான சாத்திய கூறுகளை பரிசீவிப்பது; இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே மின்சார விநியோகக் கம்பிகளைத் தொடுப்பது; எரிபொருள் விநியோகக் குழாய்களைத் தொடுப்பது…போன்றன அடங்கும்.ஆனால் இப்பிணைப்புத் திட்டங்கள் யாவும் பொருளாதார மற்றும் வர்த்தக அடிப்படையிலானவை. கொழும்புக்கும் டெல்லிக்கும் இடையிலான,அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் பிணைப்புகள். இப்பிணைப்புத் திட்டங்களின் மூலம் கொழும்பு டெல்லியை நெருங்கி செல்ல முடியும். இப்பிணைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுப்பதன்மூலம் இந்தியா இனப்பிரச்சினை தொடர்பில் தன்மீது அழுத்தம் கொடுப்பதை இலங்கை தவிர்க்க முடியுமா?