இந்தியாவின் வட மாநிலங்களில் அண்மைக்காலமாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக அங்கு நெல் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்தியாவில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக மத்திய அரசு, பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு விலை உயரும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதித் தடையால் பல்வேறு நாடுகள் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சூப்பர் மார்க்கெட்டுகளில் அரிசி வாங்க மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அமெரிக்காவில் அரிசியைப் பிரதான உணவாக உடகொள்ளும் ஆசிய சமூகத்தினர் அனைத்து வகை அரிசி வகைகளையும் வாங்கிச் செல்வதால் அரிசி விற்பனையில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
சில கடைகளில் ஒரு நபருக்கு ஒரு அரிசி பை என்ற வரம்பில் அரிசி விற்பனை செய்யப்படுவதாகவும் இதேபோல் தேவை அதிகரிப்பது தெரிந்ததும் பல கடைகள் அரிசியின் விலையை உயர்த்தி வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40 சதவீதமாக உள்ளது. இந்தியாவிலிருந்து 140க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.