நாட்டில் பிரிவினை வேண்டும் என்று கோரும் தரப்புக்களின் நிலைப்பாடு இன்னமும் மாறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த தற்போது முயற்சிக்கப்படுகிறது. ஏன், இதனை இவ்வளவு அவசரமாக செய்ய வேண்டும்?
13 இற்கு முதல், இருக்கும் உரிமைகளை தாருங்கள். தேர்தலை முதலில் நடத்துங்கள்.
நேற்று சர்வக்கட்சி மாநாட்டின்போது, ஜனாதிபதியோ தனக்கு மக்கள் ஆணைக்கிடையாது என்றும் இதனால்தான் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து பேச்சு நடத்துவதாகவும் கூறியிருந்தார்.
இது சிறந்த நிலைப்பாடுதான். ஆனால், இதுதொடர்பாக நாம் அவதானத்துடன் இருக்க வேண்டும்.
பேச்சுவார்த்தைக்கு வரும் சில கட்சிகள், இந்நாட்டின் சாதாரண பொது மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை.
அன்றிலிருந்து நாட்டில் பிரிவினை வேண்டும் என்று கோரும் தரப்புக்கள்தான் இவைகள்.
அவர்களின் நிலைப்பாடு இன்னமும் மாறவில்லை. அதுபோன்றவர்கள் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.
யாரேனும் ஒரு தரப்பை சந்தோஷப்படுத்தவோ, நாட்டில் மீண்டும் ஒரு பிரிவினைவாதத்தை ஏற்படுத்தவோ நாம் கட்சி என்ற ரீதியில் இணங்கப் போவதில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.