மாகாண சபை தேர்தல் தேவையில்லை என சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில் ”நேற்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக உரையாடுவதற்கு என்று கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அந்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ கட்சியின் தலைவர் செல்வல் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள் அந்த கூட்டத்தில் நானும் கலந்து கொண்டிருந்தேன்.
இந்த கூட்டத்தில் அதிகாரப்பகிர்வு என்று சொன்னது பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த 13 ஆம் திருத்தத்தை அமுல்ப்படுத்துவது பற்றி அவர் பேசியிருந்தார்.
இதன்போது நான் ”தற்போது கொண்டு வந்திருக்கின்ற தனிநபர் சட்டமூலத்திற்கு அமைவாக மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என சுட்டிக்காட்டினேன்.
எனினும் தேர்தல் இப்போது தேவையில்லை அதிகார பகிர்வு எப்படி இருக்க வேண்டும் என்று நாங்கள் பேசுவோம் என ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும் நீங்கள் இந்த இரண்டிலே ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும் ஒன்று தேர்தல் அல்லது அதிகாரங்கள் பகிர்வது இரண்டையும் ஒரே நேரத்தில் கேற்க முடியாது என திட்டவட்டமாகக் கூறினார்.
இது ஒரு முரண்பட்ட கருத்து அல்ல இரண்டும் ஒரே திசையில் தான் இருக்கிறது அப்படி இருக்கின்ற போது நீங்கள் ஏன் ஒன்று மட்டும் தான் கேட்க வேண்டும் என சொல்கிறீர்கள் என்று நான் அவரோடு வாக்குவாதப்பட்ட போது முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சொன்னார் தேர்தல் தேவையில்லை அதிகார பகிர்வு பற்றி பேசுவது தான் முக்கியம் என்றும் கூறினார்.
அந்தக் கருத்தோடு நாங்கள் உடன்படவில்லை ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பாக மூன்று கட்சித் தலைவர்களும் அங்கே இருக்கின்ற போது அவர்களின் அனுமதியோடு நான் விக்னேஸ்வரன் ஐயா சொன்னதை மறுத்துரைத்தேன்.
பல வருடங்களாக கால தாமதமாகி இருக்கிறது மாகாண சபைத் தேர்தல், ஆகவே அது உடன் நடத்தப்பட வேண்டும். தேர்தல் நடாத்துவதால் அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக கதைக்க கூடாது என்று எங்கேயும் இல்லை, ஆகவே ஜனாதிபதி தர்க்க ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கருத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்.
நாங்கள் இரண்டையும் கேட்கின்றோம் எனக் கூறியபோது ”அப்படியானால் நாங்கள் கூட்டத்தை முடித்துக் கொள்வோம்” எனக் கூறிவிட்டு ஜனாதிபதி சென்றுவிட்டார். ஆகவே கூட்டம் நேற்று அரைகுறையுடன் நிறைவடைந்திருக்கிறது”இவ்வாறு தெரிவித்தார்.