இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் இந்திய இல்லத்தில் இடம்பெறவுள்ளது.
இந்திய தூதுவரின் அழைப்பிற்கு அமைய, குறித்த சந்திப்பானது இடம்பெறவுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஆதவன் செய்திப்பிரிவிற்குத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில், கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
அதேநேரம், ஜனாதிபதியாக பதவி ஏற்று ஒரு வருடத்துக்கு பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இந்தநிலையிலேயே தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை இன்று பிற்பகல் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
13 ஆவது திருத்தச்சட்டம், மாகாணசபைத் தேர்தல், மலையக மக்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினை மற்றும் ஜனாதிபதியின் இந்திய விஜயம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.