இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை நாடாளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பரஸ்பர நீண்டகாலப் பொருளாதார நன்மைகளை ஏற்படுத்துவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாக அமைந்தது என்றும் உயர்ஸ்தானிகர் இங்கு சுட்டிக்காட்டினார்.
எரிசக்தித் துறை, கல்வித்துறை மற்றும் டிஜிட்டல் துறை உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இவ்விஜயத்தின் போது கலந்துரையாடப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகர் சபாநாயகருக்கு விளக்கமளித்தார்.
இந்தியா இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புக்களுக்கு நன்றி தெரிவித்த சபாநாயகர், இந்தியாவின் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருப்பது குறித்து மகிழ்ச்சி வெளியிட்டார்.
இலங்கை, இந்தியப் நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தினைக் கூட்டுமாறு கேட்டுக்கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர், அதன் உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தல்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பரிமாற்றத் திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.














