அதிகாரத்தை பரவலாக்கல் தொடர்பாக ஆராயப்பட்டபோது சில அரசியல் கட்சிகள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“13 ஆவது திருத்தச்சட்டமானது 1987 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு, தற்போதுவரை நடைமுறையில் உள்ளது.
எனினும், இதுதொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. ஒரு நாடு என்ற வகையில் முன்னேறி செல்ல வேண்டுமெனில், இந்தப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
இதற்காக நாடாளுமன்றில் நாம் அனைவரும் ஆழமான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டால் மட்டுமே ஒரு இணக்கப்பாட்டுக்கு வரமுடியும்.
சர்வக்கட்சி மாநாட்டின்போது, அதிகாரத்தை பரவலாக்கல் தொடர்பாக ஆராயப்பட்டது. எனினும், இதற்கு சில அரசியல் கட்சிகள் ஒத்துழைக்கவில்லை.
இதனை சில கட்சிகள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும்.
எமது நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டுமெனில், முதலில் நாம் அனைவரும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும்.
கடந்த 36 வருடங்களாக மாகாணசபை முறைமையினால் ஏற்பட்டுள்ள வெற்றி – தோல்வி குறித்து நாம் ஆராய வேண்டும்.
சீனா, இந்தியா, கனடா போன்ற நாடுகள் அதிகாரங்களை பகிர்ந்துள்ளன. நெதர்லாந்து, ஜப்பான் போன்ற சிறிய நாடுகளும் அதிகாரங்களை பகிர்ந்துள்ளன.
இவ்வாறு உலகின் பல நாடுகள் சர்வதேச கொள்கையின் கீழ், அதிகாரங்களை பகிர்ந்துள்ளன. இவற்றிலிருந்து நாம் பாடத்தை கற்க வேண்டும்.
550 பில்லியனை நாம் வருடத்திற்கு மாகாணசபைக்காக செலவு செய்கிறோம். அதாவது ஒரு நபருக்கு 22 ஆயிரம் ரூபாயை செலவு செய்கிறோம்.
இவ்வாறு செலவு செய்யும் பணத்திற்கு ஏற்ப நன்மைகள் எமக்கு கிடைக்கிறதா?
மாகாணசபை முறைமையை இல்லாது செய்ய முடியாது. இதனை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவோம் என சர்வதேசத்திற்கும் நாம் உறுதி வழங்கியுள்ளோம்.
இன்று இந்த சபையில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள், மாகாண சபையின் ஊடாக அரசியலுக்கு வந்தவர்கள் தான்.
இங்குள்ள யாரும் மாகாணசபை முறைமையை இல்லாது செய்ய வேண்டும் என்று கூறவில்லை.
13 ஆவது திருத்தச் சட்டத்தை உதாசீனம் செய்ய முடியாது.
இதனை பாதுகாக்க சட்டவாக்க சபைக்கும் நிர்வாக சபைக்கும் பாரிய பொறுப்பு உள்ளது.
முன்னேற்றகரமான ஜனநாயக முறைமையின் கீழ், கேந்திரமயமாக்கப்பட்ட ஆட்சி முறைமைக்கு பதிலாக அதிகாரப் பரவலாக்கலை செய்ய வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.