ஜனாதிபதி சிறந்த முடிவுகளை எடுத்தால், எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம் என எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்று எந்தவொரு மாகாணசபைக்கும் மக்கள் பிரதிநிதிகள் இல்லை. இந்தநிலையில், 13 ஐ யாருக்காக நாம் நிறைவேற்றப் போகிறோம்?
தேர்தலுக்கு தற்போது நாட்டில் இடமில்லை. சர்வக்கட்சி மாநாட்டின்போது நாம் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தினோம்.
மாகாணசபைத் தேர்தலை முதலில் நடத்த வேண்டும். 2 மாகாணங்களுக்கும் மட்டுமன்றி, 9 மாகாணங்களுக்கும் தேர்தலை நடத்த முன்வர வேண்டும்.
மக்கள் ஆணை கிடைத்தவுடன், மாகாணசபைக்கான உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு, 13 தொடர்பாக கலந்துரையாட முடியும்.
134 பேரின் ஆணையுடன்தான் ஜனாதிபதி நாடாளுமன்றில் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதிக்கு கீழ் தான் அமைச்சரவை உள்ளது.
எனவே, தனக்கு பெரும்பான்மை இல்லை என்று ஜனாதிபதி கூறமுடியாது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஜனநாயகத்திற்காக நீங்கள் குரல் கொடுத்தீர்கள்.
இது ஜனாதிபதியான பின்னர் இல்லாமல் போகக்கூடாது. நீங்கள் சிறந்த முடிவுகளை எடுத்தால், எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.