கடன் மறுசீரமைப்புச் செயல்முறை இன்னும் முடிவடையாத நிலையில் அதன் செயற்பாடுகளைச் சீர்குலைக்க பலர் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் இலங்கை வல்லுநர் சங்கங்களின் அமைப்பின் 36 ஆவது வருடாந்த மாநாடு இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், எதிர்காலம் குறித்த நம்பிக்கை வைக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் சீரான பொருளாதார நிர்வாகத்தை மேற்கொண்டால், எதிர்காலத்தை நம்பிக்கையுடன் திட்டமிட முடியும் என்றும் தெரிவித்தார்.
அரசியல் தலைவர்கள் பொருளாதாரம் தொடர்பான சரியான முடிவுகளை எடுக்கத் தயங்கியதால் நிலைமை மோசமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருந்ததாகவும் நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திய பின்னர், நாட்டை மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு மாதத்திற்குள் குறுகிய கால தீர்வுகளை வழங்க முடிந்தது. வரிசையில் நிற்கும் நிலைமைக்கு முடிவு கட்டப்பட்டது என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
மேலும், கடன் மறுசீரமைப்புச் செயல்முறை இன்னும் முடிவடையவில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி, இந்த செயற்பாட்டை சீர்குலைக்க பல்வேறு நபர்கள் முயற்சித்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
இந்த கடன் மேம்படுத்தல் திட்டம் நிறுத்தப்பட்டால், வங்கிகள் உட்பட அனைத்து துறைகளும் ஒரு வாரத்தில் வீழ்ச்சியடைந்து விடும் எனவும் அவர் கூறினார்.
2019 இல் நாட்டின் பொருளாதாரம் காணப்பட்ட நிலைக்கும் தற்போதுள்ள நிலைமைக்கும் மிகப் பெரிய இடைவெளி காணப்படுவதாகவும் எவ்வாறாயினும், 2019 இல் இருந்த நிலைமைக்கு நாடு வந்துகொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
கூட்டு ஒத்துழைப்பின் ஊடாக, பொருளாதாரத்தை துரிதமாக பலப்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிட்ட ஜனாதிபதி, மனித வள மூலதனம் இதற்கு அவசியமாகும் என்று குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வின்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இலங்கை வல்லுநர் சங்கங்களின் அமைப்பின் அதிகாரிகள் சிலருக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.