பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 40 பேர் மட்டுமே சிறைச்சாலைகளில் உள்ளார்கள் என போதே நீதிமன்ற, சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சந்தேக நபர்கள் மற்றும் நீதிமன்றங்களால் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகள் என தற்போது 28,468 சிறைக்கைதிகள் சிறையில் இருக்கின்றனர்.
இவர்களில் 50.3 வீதமானவர்கள் போதைப்பொருள் சம்பந்தமான குற்றத்திற்காக தண்டனை பெற்றவர்கள்.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் தண்டனை பெறும் இவ்வாறான குற்றவாளிகளுக்கு தண்டைனைகளை வழங்குவது மாத்திரம் போதைப்பொருள் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது.
இவர்களுக்கு திறன்விருத்தி, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்து விடயங்கள் குறித்தும் புனர்வாழ்வளிப்பது அவசியமாகும்.
இவ்வாறான செயற்பாடுகளின் மூலமே அவர்கள் தண்டனைக் காலம் முடிந்து விடுதலையானதும் மீண்டும் அதே தவறைச் செய்வதைத் தடுக்க முடியும்.
அரசாங்கம், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தி அதிகமானவர்களை சிறையில் அடைத்து வருவதாக சிலர் கூறுகின்றனர்.
ஆனால், தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறைச்சாலைகளில் சுமார் 40 பேரே இருக்கின்றனர்.
சிறைக்கைதிகளுக்கு முறையாக உணவு வழங்கப்படுவதில்லை என்று ஒரு சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியிலும் சிறைக்கைதிகளுக்கு உணவு வழங்க மாத்திரம் அரசாங்கம் 3.9 பில்லியன் ரூபா நிதியை செலவிடுகிறது.
சிறைச்சாலைகளில் 13,000 சிறைக்கைதிகளுக்கே இடவசதி இருக்கின்ற போதிலும், தற்போது சுமார் 29,000 கைதிகள் இருப்பது பாரிய பிரச்சினையாகக் காணப்படுகிறது.
இதனால், பாரிய குற்றவியல் குற்றங்கள் இன்றி, சிவில் குற்றங்களுக்கு குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணை நிறைவைடையும் வரை குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு தொகையினரை வீட்டுக்காவலில் தடுத்து வைக்கும் திட்டம் குறித்து ஆலோசித்து வருகிறோம்.
சிறைக்கைதிகளையும் நாட்டுக்கு பயன்மிக்கவர்களாக மாற்றும் வகையில் மேலும் பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
அந்த வகையில் சிறைச்சாலைக்குள்ளே உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய தொழிற்சாலைகளை நிறுவுவது குறித்து கலந்தாலோசித்து வருகிறோம்.
தனியார் துறையின் பங்களிப்புடன் இந்தப் பணியை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.