விகாரைகள் மீது கை வைத்தால், வடக்கு கிழக்கிற்கு சென்று தலைகளை வெட்டுவேன் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ள கருத்தானது சமகால அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
களனியில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா, விகாரைகளுக்கும் பௌத்தத்திற்கும் எதிராக செயற்படும் தமிழர்களின் தலைகளுடன் வடக்கு – கிழக்கிலிருந்து திரும்புவேன் என்று கூறியிருந்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து நான் வடக்கு – கிழக்கிற்கு வருவேன்.
நீங்கள் விகாரைமீது கை வைத்தாலோ சங்கரத்ன மீது வைத்தாலோ நான் வெறுங்கையுடன் அங்கிருந்து திரும்பமாட்டேன்.
உங்களின் தலைகளையும் தூக்கிக் கொண்டுதான் களனிக்கு வருவேன். இதிலிருந்து நான் மாறப்போவதில்லை.
இது பௌத்த நாடாகும்.
கத்தோலிக்கர்களாகட்டும், முஸ்லிம்களாகட்டும், இந்துக்களாகட்டும், இங்கு அனைவருக்கும் மத சுதந்திரம் உள்ளது.
சோழ மன்னன், எல்லாளனுடன் வந்தவர்களுக்கு எல்லாம் உரிமை பற்றி இங்கு பேசமுடியாது. ஆனால், முஸ்லிம்களுக்கு உரிமை பற்றி பேச தகுதியுள்ளது.
ஏனெனில், அவர்கள் எமது முதாதையினரைத்தான் திருமணம் செய்தார்கள். இன்று இனவாதத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆனால், மேர்வின் சில்வாவுக்கு அந்த தேவை இல்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.