அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை ,நிந்தவூர், காரைதீவு ஆகிய பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டுயானைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பகுதியை ஊடறுத்து செல்லும் பிரதான வீதியில் யானைகள் அடிக்கடி உலாவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 17 க்கும் அதிகமான யானைகள் அப்பகுதியில் வயல் நிலங்களை நோக்கி வருகை தருவதாகவும் இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், மக்கள் மிகுந்த அச்சத்துக்கு மத்தியில் அப்பகுதியில் வசித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யானைக்கூட்டத்தை கட்டுப்படுத்தி அவற்றை காட்டிற்குள் விரட்டுவதற்கும், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உடனடியாக வருகை தருவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அண்மைக்காலங்களில் யானை – மனித மோதலால் யானைகளும் மனித உயிர்களும் இழக்கின்ற சந்தர்ப்பங்கள் சடுதியாக அதிகரித்து வரும் நிலையில் யானை – மனித மோதலால் அதிகளவான மனித உயிரிழப்புக்கள் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.