சரத் வீரசேகர மீண்டும் ஒரு தடவை முல்லைத்தீவு நீதிபதியை இழிவாகப் பேசியுள்ளார்.குறிப்பிட்ட நீதிபதியை அவர் அவ்வாறு அவமதிப்பது இது இரண்டாவது தடவை.அதுவும் அதை அவர் நாடாளுமன்றத்தில் வைத்துச் செய்கின்றார். இதையே நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தால் அது நீதிமன்ற அவமதிப்பு என்ற குற்றமாகக் கருதப்படும். ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சிறப்புரிமைக்குள் பதுங்கிக் கொண்டு சரத் வீரசேகர நீதிபத்தியை அவமதிக்கின்றார்.அப்படியென்றால் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனக்குள்ள சிறப்புரிமைக்குள் மறைந்து கொண்டு நீதிமன்றத்தை அவமதிக்கலாம் என்று எடுத்துக் கொள்ளலாமா?
நாட்டின் சட்டங்களை இயற்றும் அதி உயர் சபை ஒன்றில், நீதிமன்றங்களை அவமதிப்பதற்கான சிறப்புரிமை இருக்கும் என்றால், அந்தச் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் சட்டங்களை எப்படி நீதிமன்றங்கள் அமுல்படுத்துவது?
சரத் வீரசேகரவின் பேச்சுக்கு எதிராக தமிழ் சட்டத்தரணிகள் கடுமையான எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள். “தைரியம் இருந்தால் நாடாளுமன்றுக்கு வெளியேவந்து நீதிபதிக்கு எதிரான கருத்தை வெளியிட்டு காட்டுமாறு” வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் சவால் விடுத்துள்ளது.ஆனால் தான் நாடாளுமன்றத்துக்குள் பேசிய விடயத்துக்குக் காட்டப்படும் எதிர்வினைக்கு, நாடாளுமன்றத்தில் வைத்துத்தான் பதில் சொல்லப் போவதாக சரத் வீரசேகர பதில் கூறியுள்ளார்.அதாவது நாடாளுமன்றத்துக்குள்தான் நீதிமன்றத்தை அவமதிப்பதற்கான பாதுகாப்பு அவருக்கு கிடைக்கும் என்று பொருள்?
மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான உதய கமன்பில நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் கொழும்பு வீட்டை முற்றுகையிடுமாறு சிங்கள இனவாதிகளுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு தேரரும் உட்பட விரல்விட்டு எண்ணக்கூடிய தொகையினர்தான் கஜேந்திரகுமாரின் வவீட்டை நோக்கி வந்தார்கள். அவர்களிடமிருந்து வீட்டைப் பாதுகாப்பதற்காக அங்கு கொண்டுவரப்பட்ட போலீசாரின் தொகை அதைவிடப் பல மடங்கு அதிகம். கமன்பிலவின் கோரிக்கைக்கு இனவாதிகள் போதிய அளவுக்கு பதில்வினையாற்றவில்லை?
கமன்பில மட்டுமல்ல மேர்வின் டி சில்வா, விமல் வீரவன்ச உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுக்களைப் பேசி வருகிறார்கள்.பௌத்தம் இலங்கைத் தீவின் அரச மதம்.அந்த அரச மதத்தைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் நிலப்பறிப்பு, சிங்கள பௌத்த மயமாக்கல் நடவடிக்கைகளில் முன்னணியில் காணப்படுகிறார்கள்.அவர்களும் தமிழ் மக்களுக்கு எதிரான வெறுப்பேற்றும் பேச்சுக்களை பேசி வருகிறார்கள்.
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிலரும் பௌத்த மதகுருக்களும் சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களும் இணைந்து முன்னெடுத்துவரும் சிங்களபௌத்த மயமாக்கல் மற்றும் நிலப்பறிப்பு நடவடிக்கைகளின் விளைவாக நாட்டில் இன வன்முறைகள் ஏற்படலாம் என்று சில வெளிநாட்டுப் புலனாய்வு நிறுவனங்கள் அறிவித்ததாக அண்மையில் செய்தி வெளிவந்தது. குறிப்பாக குருந்தூர் மலையை முன்வைத்தே மேற்படி செய்திகள் வெளிவந்தன.
“இது தொடர்பாக அரசாங்கம் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து தெளிவுபடுத்த வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.ஆனால் இனக்கலவரம் தொடர்பில் எந்த ஒரு வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவினிடமிருந்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்று பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குருந்தூர் மலை விவகாரம் வெளிநாட்டுத் தூதரகங்களின் கவன ஈர்ப்புப் பரப்புக்குள் வந்துவிட்டது என்று தெரிகிறது.அதுதொடர்பில் அண்மையில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கருத்து தெரிவித்துள்ளார். குருந்தூர் மலை விவகாரத்தை அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருப்பதாகஇலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் (Julie Chung) தெரிவித்துள்ளார். “குருந்தூர் மலை விவகாரத்தில்,சட்ட பிரச்சனை,காணிப்பிரச்சனை,அரசியல் பிரச்சனை என மூன்று விடயங்கள் உள்ளடங்கி உள்ளன.அதனால் இது ஒரு சிக்கலான விடயம், இதனை கவனமாக கையாள வேண்டும்.இதனை இலங்கை அரசாங்கம் எவ்வாறு கையாளுகிறது என்பதனை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருக்கிறோம்.இந்தச் சிக்கலுக்கு இலங்கை அரசாங்கம் மிகவிரைவில் தீர்வைக் காண வேண்டும். இல்லாவிட்டால், இது ஒரு பாரிய பிரச்சனையாக உருவெடுக்கும்.இந்த பிரச்சனையை விரைந்து தீர்ப்பதற்கு,அமெரிக்கா அழுத்தங்களைக் கொடுக்கும்” என்று ஜுலி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தூதர் கூறியதற்கும் சில வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புக்கள் வெளியிட்டதாகக் கூறப்படும் அறிக்கைகளுக்கும் இடையே ஒத்த தன்மை உண்டு.அதாவது தற்போது நிகழும் சிங்கள பௌத்த மயமாக்கல் மற்றும் நிலப்பறிப்பு நடவடிக்கைகள் அவற்றின் போக்கில் இனங்களுக்கிடையே மீண்டும் மோதல் நிலைமைகளை உருவாக்கலாம் என்பதனை இலங்கைக்கு வெளியே இருக்கும் தரப்புகள் அரசாங்கத்துக்குச் சுட்டிக்காட்ட முயல்கின்றன என்று அர்த்தம்.
சிங்கள அரசியல்வாதிகளும் பிக்குகளும் வெறுப்புப் பேச்சுக்களின் மூலம் வன்முறைகளைத் தூண்டுவது என்பது இப்பொழுதுதான் நடக்கும் ஒரு விடயமல்ல. கடந்த பல தசாப்த கால நாடாளுமன்றப் பதிவேடுகளைத் தொகுத்துப்பார்த்தால் அது தெரிய வரும்.குறிப்பாக நாடாளுமன்றப் பதிவேட்டில் இருந்து தணிக்கை செய்து அகற்றப்பட்ட இனவாதப் பேச்சுக்களைத் தொகுத்தாலே தெரியும் இலங்கை தீவில் ஏன் யுத்தம் வெடித்தது என்று.
கடந்த பல தசாப்த காலங்களில் இலங்கைத் தீவை தொடர்ச்சியாக ஆண்டு வந்த அநேகமாக எல்லா அரசாங்கங்களிலும் யாராவது ஒரு தீவிரவாதி இருப்பார். அல்லது யாருக்கும் கட்டுப்படாதவர் போலத் தோன்றும் ஓர் இனவாதி நாடாளுமன்றத்துக்குள் இருப்பார். சிறில் மத்தியு,இரட்னாயக்கா, மோவின் டி சில்வா, சரத் வீரசேகர,கமன் பில, வீரவன்ச….. என்று இந்தப் பட்டியல் நீண்டு செல்லும்.இவர்களுடைய வெறுப்புப் பேச்சுக்களை அரசாங்கம் அல்லது ஆளுந்தரப்பு அடக்க முடியாது என்பது போல ஒரு தோற்றம் கடந்த பல தசாப்தங்களாக பேணப்பட்டு வருகிறது.ஆனால் அது ஒரு தோற்றம்தான். உண்மை அதுவல்ல.இவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சுக்களை பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து சிங்கள பௌத்த இனவாத வாக்குகளைத் திரட்டுவதே தொடர்ச்சியாக வந்த எல்லா அரசாங்கங்களினதும் உள்நோக்கம் ஆகும்.
ஒருபுறம் முக்கிய பொறுப்பில் உள்ள அமைச்சர்கள் மிதவாதிகள் போல தோன்றுவார்கள். வெளிநாடுகளோடும் தமிழ் முஸ்லிம் சமூகங்களோடும் அவர்கள் நல்லுறவை வைத்திருப்பார்கள். இன்னொரு பக்கம் யாராவது ஒரு தீவிரவாதி, யாராலும் கட்டுப்படுத்தப்பட முடியாதவர் போல தோன்றுவார்.அவர் வெறுப்புப் பேச்சை வாந்தி எடுத்துக் கொண்டே இருப்பார்.அரசாங்கம் அவரைக் கட்டுப்படுத்தாது. அல்லது அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது போல ஒரு தோற்றத்தை காட்டிக்கொள்ளும். ஆனால் அது ஒரு தந்திரம்.ஆட்சித் தந்திரம்.
சிங்கள பௌத்தம் எனப்படுவது இலங்கைத்தீவைப் பொறுத்தவரை பல நூற்றாண்டு கால ஆட்சிக் கொள்கை. எனவே அது ஒரு அரச கொள்கை என்ற அடிப்படையில்,அதற்கு ஓர் அரசுக்குரிய தந்திரங்களும் கைவரும்.அந்த அடிப்படையில்தான் நாடாளுமன்றத்தில் யாரோ ஒரு அல்லது சில தீவிரவாதிகள் பேணப்படுகிறார்கள்.அவர்களுடைய வெறுப்புப் பேச்சுக்கள் சிங்கள பௌத்த இனவாத வாக்குகளை கவர்வதற்கு எப்பொழுதும் உதவும்.
ஆனால் இனப்படுகொலை தொடர்பான ஐநாவின் நிபுணர்கள் கூறுவதன்படி இனப்படுகொலை எனப்படுவது ஒரு சம்பவம் அல்ல. அது ஒரு தொடர் நிகழ்ச்சி. அது வெறுப்பு பேச்சிலிருந்து தொடங்குகின்றது.”ஜெமனியில் இனப்படுகொலை எனப்படுவது நச்சுவாயு கூடங்களில் இருந்து தொடங்கவில்லை.அது சிறுபான்மைக்கு எதிரான வெறுப்பு பேச்சிலிருந்து தொடங்குகின்றது” என்று ஐநா கூறுகின்றது. இதில் சம்பந்தப்பட்ட ஐநா நிபுணர்களின் தொகுக்கப்பட்ட கருத்துக்களின்படி கம்போடியாவில்,ருவண்டாவில்,போஸ்னியா,ஹெர் சகோவினாவில்,மியான்மரில்…என்று உலகம் முழுவதிலும் வெறுப்புப் பேச்சிலிருந்தே இனப்படுகொலை தொடங்கியது. இனங்களுக்கு இடையே மோதலை தூண்டுவதிலும், சிறுபான்மைக்கு எதிராகப் பெரும்பான்மையைத் தூண்டுவதிலும் வெறுப்பு பேச்சு முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஐநாவின் தொகுக்கப்பட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐநா பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் பின்வருமாறு கூறியிருந்தார்… “கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக, ருவண்டாவில் இருந்து ஒஸ்ரியா,கம்போடியாவரை,இனப்படுகொலையும் உட்பட கொடுமைகள் குற்றங்கள் போன்றவற்றுக்கான முன்னோடியாக வெறுப்புப் பேச்சு இருந்து வருகிறது” என்று.
இலங்கைத் தீவிலும் கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலான அனுபவம் அதுதான். 2009ல் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் நிலமை அதுதான். ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் கையாளப்பட்டுவரும் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியிலும் நிலைமை அதுதான். பொருளாதார நெருக்கடிக்குள் நாடு சிக்குண்டிருக்கும் இக் காலகட்டத்திலும் நிலைமை அதுதான்.