இந்தியாவின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்காத விடயங்களை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும், அவ்வாறு எடுக்க தவறும்பட்சத்தில் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒரு ஆபத்தான நிலையில் இலங்கை போய்க் கொண்டிருக்கின்றது. ஏனென்றால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு அதே போன்று இலங்கை சீனாவுடன் வைத்திருக்கின்ற உறவு நிலைமைகளை மோசமாக்கியுள்ளது எனவும் தெரிவித்தார்.
இலங்கையைப் பொருத்தமட்டில் மிக கவனமாக கையாள வேண்டும் சீனாவின் உடைய ஆதிக்கம் இங்கு அதிகரிக்குமானால் நாட்டில் இருக்கின்ற மக்களை அது பெரிய அளவில் பாதிக்கும எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்தியாவிடம் இருந்து கிடைக்கும் பாதுகாப்பிற்கு அச்சத்தை வழங்கும் விதமாகவே சர்ச்சைக்குரிய சீன ஆய்வுக் கப்பல் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றம்சுமத்தியுள்ளார்.