சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மட்டு. ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30ஆம் திகதி மன்னாரிலும் மட்டக்களப்பிலும் பேரணிகளை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்திடமிருந்து எமது கோரிக்கைகளுக்கு இதுவரையில் எந்த பதிலும் கிடைக்காத நிலையிலேயே சர்வதேச நீதிப்பொறிமுறையினை கோரி நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனிவரும் காலங்களில் சர்வதேச நீதிப்பொறிமுறையினை கோரியே போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று இலங்கையில் இவ்வாறான கடத்தல்கள் எதிர்வரும் காலங்களில் இடம்பெறாது என்ற உறுதிமொழியை சர்வதேச நாடுகள் வழங்கவேண்டும்.
எமக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமை எமது எதிர்கால சந்ததிக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை வலியுறுத்தியே இந்த பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார்.