மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவின் மூன்று ஆடைகள் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏலத்திற்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலியன்ஸ் என்ற ஏல நிறுவனத்தினால் அடுத்த மாதம் 6-ம் திகதி முதல் 8ஆம் திகதி வரை பெவர்லி ஹில்ஸ் பகுதியில் குறித்த ஏல நிகழ்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1997ஆம் ஆண்டு டயானா விபத்தில் இறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்னர் தொண்டு நிறுவனங்கள் சிலவற்றுக்காக தனது 70 ஆடைகளை ஏலம் விட்டிருந்தார்.
அதில் 3 ஆடைகளை ஏலம் எடுத்த மிச்சிகனை சேர்ந்த எலன் பெத்தோ என்ற பெண்மணி அண்மையில் காலமானதையடுத்து அவரிடம் இருந்த டயானாவின் உடைகள் மீண்டும் ஏலத்திற்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 3 ஆடைகளையும் டயானா பல முறை அணிந்துள்ளார் எனவும், அவை அதிகபடியாக 4 லட்சம் டொலர்கள் வரை ஏலம் போகக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.