கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 05 ஆம் திகதி மீள முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் கடந்த 08 ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு அதற்கான திட்டங்கள் 17 ஆம் திகதி தாக்கல் செய்யப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய குறித்த வழக்கு தொடர்பாக வழங்கப்பட்ட உத்தரவின் பிரகாரம் கடந்த 17 ஆம் திகதியன்று தொல்பொருள் திணைக்களத்தினர், சட்டவைத்திய அதிகாரி அடங்கிய குழுவினர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரதிநிதிகள், மற்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்த்தீபன் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையில் முன்னிலையாகியிருந்தனர்.
இதன்போது, அகழ்வு பணி தொடர்பான பாதீட்டு அறிக்கையினை தொல்பொருள் திணைக்களம் நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தது.
அகழ்வு பணிக்காக நிதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு கிடைக்கப் பெறாத நிலையில் உடனடியாக அகழ்வு பணியை மேற்கொள்ள முடியாது இருப்பதாக சட்ட வைத்திய அதிகாரியினால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் பாதீட்டினை தாக்கல் செய்து அகழ்வு பணியினை மேற்கொள்ள முடியும் என தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 05 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.