நாட்டில் இடம்பெற்று வரும் மருந்து கொள்வனவு செயற்பாடுகள் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
மருந்துக் கொள்வனவு செயற்பாடுகள் தொடர்பில் மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
தரமான மருந்துகள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதில் உள்ள பிரச்சினைகளை கண்டறிதல் உள்ளிட்ட விடயங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இதன்படி, நாட்;டில் தற்போதுள்ள மருந்துக் கொள்வனவு செயற்பாடுகள் தொடர்பில் எந்தவொரு தரப்பினரும் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் அடுத்த மாதம் 13 ஆம் திகதிக்கு முன்னர் சுகாதார அமைச்சிற்கு எழுத்து மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இலங்கையில் மருந்துக் கொள்வனவு செயற்பாட்டில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிவதற்கும், வெளிப்படையான கொள்வனவு முறையை அறிமுகப்படுத்துவதற்கும், உயர்தர மருந்துகளின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்வதற்கும், மருந்து ஒழுங்குமுறை மறுசீரமைப்பு தொடர்பான யோசனைகளை முன்வைப்பதற்கும் ஐந்து நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை கடந்த ஜூலை மாதம் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட குழுவின் அறிக்கை மூன்று மாதங்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிக்கை தயாரிப்பதற்கு முன்னதாக, மருந்து கொள்முதல் செயல்முறை குறித்து பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்பட வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எந்தவொரு தனிநபரோ அல்லது நிறுவனமோ இவ்வாறு தங்கள் கருத்துக்களை முன்வைக்க முடியும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.