சூரியனை ஆராய்வதற்காக, இஸ்ரோ முதல்முறையாக அனுப்பிய ஆதித்யா-எல்1 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதிற்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு , இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் முதல் சூரிய ஆய்வுத்திட்டமான ஆதித்யா -எல் 1-ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துகள். பிரபஞ்சத்தை பற்றிய புரிதலை மேம்படுத்துவதற்காகவும், மனித குலத்தின் நலனுக்காகவும் அயராத அறிவியல் முயற்சிகள் தொடரும் எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அத்துடன், சந்திரயான் -3 விண்கலத்தையடுத்து, ஆதித்யா-எல்1-ஐ வெற்றிகரமாக ஏவியதன் மூலம் நாட்டின் அடையாளத்தை இஸ்ரோ மீண்டும் உயர்த்தியுள்ளது எனவும் நமது விஞ்ஞானிகளின் இந்த சாதனைக்காக ஒட்டுமொத்த அனைத்து காங்கிரஸ் குடும்பம் பெருமிதம் கொள்கிறது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆதித்யா-எல்1 வெற்றிகரமாக ஏவப்பட்டது இஸ்ரோவுக்கும், இந்தியாவுக்கும் மற்றொரு பிரம்மாண்டமான சாதனை என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஆதித்யா-எல்1 என்ற விண் கலத்தை, பி.எஸ்.எல்.வி -சி57 ரொக்கெட் மூலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து நேற்று காலை 11.50 மணிக்கு அனுப்பியது.
இது இன்னும் 125 நாட்களில் பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ தூரம் பயணம் செய்து, சூரியனுக்கு அருகிலுள்ள சுற்று வட்டபாதையின் லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலை நிறுத்தப்படும்.
இந்த நிலையில் சந்திரயான் – 3 வெற்றிக்குப்பின்னர் இந்தியா தனது விண்வெளி பயணத்தைத் தொடர்கிறது.