நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக பல பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
களுகங்கை மற்றும் நில்வலா கங்கை ஆகியன பெருக்கெடுத்து ஓடுவதால் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இரத்தினபுரி பத்தேகமவ மற்றும் பாணடுகம ஆகிய பகுதிகளிலும் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக குகுலே கங்கை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாக சிறிய ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் புலத்சிங்கள பிரதேசத்தில் உள்ள தாழ் நிலங்கள் பலவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் பாடசாலை மாணவர்களும், குறித்த வீதியை பயன்படுத்தும் பிரதேச மக்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை நாட்டின் சில பகுதிகளில் மேலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.