சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கம் தோற்கடித்தால் அந்தநேரத்தில் இந்த நாட்டு மக்களும் தோல்வியடைவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சுகாதார அமைச்சர் மீதான வெறுப்பு அல்லது கோபத்தினால் கொண்டு வரவில்லை என்றும், நாட்டிலுள்ள அப்பாவி மக்கள் குறித்த உணர்வு எமக்கு இருப்பதாலேயே கொண்டு வந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் நாட்டில் சுகாதார சீர்கேடு நிலவியிருப்பதை ஏற்றுக்கொண்டு அதிலிருந்து மீண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த நாட்டில் சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை என எவராலும் கூற முடியாது எனவும், சுகாதார துறையின் வீழ்ச்சியை ஆதாரங்களுடன் நிரூபிக்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.