சனல் நாலு வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்த ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் மூவர் அடங்கிய விசேட குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். பொலிஸார், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் அரச சேவை அதிகாரிகளை உள்ளடக்கியதாக இக்குழு அமையும்.இக்குழுவை நியமிக்கும் பொறுப்பு ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானியும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரட்ணாயக்க மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித் பண்டார தென்னகோன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், சனல் நாலு வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் ஆராய பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைக்கவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
ஆனால்,இலங்கையில் குற்றமிழைக்கும் படையினரும், அரசியல்வாதிகளும் என்றும் தண்டிக்கப்படுவதில்லை. இந்த வரலாற்றை மாற்றும் வரை அங்கு எதுவும் மாறப்போவதில்லை என்று பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமை ஆலோசகர் அலன் கீனன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.’வாக்குறுதிகளை வழங்குவது இலங்கை அரசுகளின் வழக்கமாகிவிட்டது. விசாரணைகளை அரசுகளே குழப்பி அதனை அனைத்துலக மட்டத்திற்கு கொண்டு செல்லாது தடுக்கின்றன.உதாரணமாக உடலகம ஆணைக்குழுவை கூறலாம். மகிந்தாவே அதனை அமைத்தார். அவரின் ஆட்சிக்காலத்தின் முதலாண்டு பகுதியில் இடம்பெற்ற 17 படுகொலைகள் தொடர்பான விசாரணை அது. ஆனால் 2011 ஆம் ஆண்டு அவர்கள் அனுபவங்களை கற்பதும்,நல்லிணக்கப்பாடும் என்ற குழுவை அமைத்தனர். இந்த குழு காலத்தை கடத்துவதிலும்,அனைத்துலக விசாரணைகளை தடுப்பதிலும் தான் கவனம் செலுத்தியது. பொதுமக்களின் படுகொலைகளில் படையினருக்கு உள்ள தொடர்புகளையும் அது மறைக்க முயன்றது.
எனவே இலங்கையில் அமைதி ஏற்படவேண்டும் என்றால் அங்கு விசாரணைக் குழுக்கள் சுதந்திரமாக இயங்கவேண்டும் என்பதுடன், அவர்களின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படவேண்டும். அதற்கான அனைத்துலக உதவிகளும் பெறப்பட வேண்டும் என அலன் கீனன் தெரிவித்துள்ளார்.
அதுபோலவே முன்னாள் இந்திய அமைச்சர் நிதின் கட்காரி ஒரு முறை பின்வருமாறு சொன்னார் “மனம் உண்டானால் இடம் உண்டு. மனம் இல்லையெ ன்றால், அங்கே மேலாய்வு, கலந்துரையாடல், கருத்தரங்கு, குழுக்கள், உபகுழுக்கள், ஆராய்ச்சிக் குழுக்கள் போன்றன மட்டுமே இருக்கும்” என்று. இலங்கைத் தீவின் விசாரணைக் குழுக்களும் ஆணைக் குழுக்களும் அப்படித்தான்.அலன் கீனன் கூறுவதுபோல இலங்கைத் தீவின் அரசியல் பாரம்பரியத்தில் விசாரணை குழுக்கள் எனப்படுகின்றவை காலத்தைக் கடத்துபவை அனைத்துலக விசாரணைகளைத் தடுப்பவை.
இப்பொழுது உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தொடர்பாக, சனல் நாலு வெளியிட்டிருக்கும் ஆவணப்படத்தில் கூறப்பட்டிருக்கும் விடயங்கள் தொடர்பாக, விசாரிப்பதற்கு அரசாங்கம் உருவாக்கப் போகும் விசாரணைக் குழுக்களும் அந்த வேலையைத்தான் செய்யப் போகின்றனவா?
கடந்த அரை நூற்றாண்டு காலப்பகுதிக்குள் உருவாக்கப்பட்ட எந்த ஒரு ஆணைக் குழுவாவது உண்மையை கண்டுபிடித்திருக்கிறதா? குற்றவாளிகளைத் தண்டித்திருக்கிறதா?எனவே,சனல் நாலு வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பான விசாரணைக் குழுக்கள் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வரையிலும் சிங்கள மக்களின் கவனத்தையும் உலக சமூகத்தின் கவனத்தையும் திசை திருப்பும் உத்திகளாகவே அமைந்து விடுமா?
ஏனெனில் தமிழ் மக்கள் பொறுத்து இதுவரை உருவாக்கப்பட்ட ஆணைக் குழுக்கள்,விசாரணை குழுக்கள் போன்றவற்றால் அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகளில் யாராவது தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா? நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களையே கோட்டாபய ராஜபக்ஷ விடுதலை செய்தார். அவ்வாறு விடுதலை செய்யப்பட்ட இரண்டு படை அதிகாரிகள் நாட்டுக்குள் வருவதை கனடா தடை செய்தது. இப்படித்தான் இருக்கிறது இலங்கை தீவின் உள்நாட்டு நீதியின் நிலைமை. இந்த லட்சணத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக உண்மையான குற்றவாளிகள் விசாரிக்கப்படுவார்கள் அல்லது தண்டிக்கப்படுவார்கள் என்று நம்பத்தக்க விதத்தில் இலங்கைத் தீவின் அரசியல் கலாச்சாரம் இல்லை.
அதனால்தான் அது தொடர்பில் அனைத்துலக விசாரணை தேவை என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் தொடக்கத்தில் இருந்தே கூறி வந்தார். முஸ்லிம்களும் அவ்வாறு கேட்டார்கள். அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸாவும் அவ்வாறு கேட்டிருக்கிறார். இலங்கைத் தீவில் மூன்று இனங்களும் வெவ்வேறு காரணங்களுக்காக அனைத்துலக விசாரணையைக் கேட்கின்றன. ஆனால் ஆலன் கீனன் கூறுவது போல அனைத்துலக விசாரணைகளைத் தடுக்கும் நோக்கத்தோடு உள்நாட்டு விசாரணைக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளனவா?
இந்த விடயத்தில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஒரு கட்ட வெற்றியைப் பெற்று விட்டார். அவர் 2019ஆம் ஆண்டு ராஜபக்சக்களை ஆதரித்தவர். இன்றுவரையிலும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணையை அவர் கேட்டதில்லை. இனப்பிரச்சினை தொடர்பில் அவர் நீதியின் பக்கம் நின்றதை விடவும் சிங்கள பௌத்த அரசாட்சியின் பக்கம்தான் அதிகம் நின்றிருக்கிறார். எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தொடர்ச்சியாக, பலமாக ஒலித்த குரல் அவருடையது.கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு அவர் தொடர்ச்சியாக கருத்துக் கூறி வந்திருக்கிறார். இது விடயத்தில் பாப்பரசரிடமும் முறையிட்டிருக்கிறார்.
அந்தக் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் அரசியல் உள்நோக்கமுடைய சக்திகள் உண்டு என்பதனை முதலில் தெரிவித்தவர்களில் அவரும் ஒருவர். முன்னாள் சட்டமா அதிபர் ஒருவர் அவ்வாறு கூறியதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்சே கூறுகிறார். எனினும் கர்தினால் மல்கம் ரஞ்சித், குண்டு தாக்குதல்களின் பின்னணியில் அரசியல் உள்நோக்கமுடைய வேறு சக்திகள் இருந்தன என்பதனை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். தாக்குதல்களை செய்த தற்கொலைக் குண்டுதாரிகளை யாரோ பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற சந்தேகத்தை நாட்டுக்குள் வலிமையாகப் பரப்பியது அவர்தான். அந்த விடயத்தில் கர்தினால் மல்கம் ரஞ்சித் இப்பொழுது வெற்றி பெற்றிருக்கிறார்.
இனப்பிரச்சினை தொடர்பான கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் கருத்துக்களை இக்கட்டுரை ஏற்றுக் கொள்ளவில்லை.ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவருடைய குரல் விட்டுக் கொடுப்பின்றி சன்னமாக ஒலித்தது என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். மதகுருக்கள் அரசியல் செய்வதும்; மதகுருக்கள் அரசியல்வாதிகளை அதாவது பண்டாரநாயக்காவை சுட்டுக் கொன்றதும்;மதகுருக்கள் அரசியலுக்காக சுட்டுக் கொல்லப்படுவதும்; காணாமல் ஆக்கப்படுவதும் இலங்கைத் தீவின் அரசியல் பாரம்பரியத்தின் ஒரு பகுதி. இந்த அருவருப்பான ,அபகீர்த்தி மிக்க ஒரு மத அரசியல் பாரம்பரியத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்த மெய்யான குற்றவாளிகளை விசாரித்துக் கண்டுபிடிக்க வேண்டும் என்று மல்கம் ரஞ்சித் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தார். இப்பொழுது சனல் நாலு அவருடைய கேள்விகளுக்கு பதில் கொடுத்திருக்கிறது.
ஓர் அனைத்துலக ஊடகம் ஒரு சிறிய நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் நிர்ணயகரமான ஒரு பாத்திரத்தை வகிக்க முடியும் என்பதற்கு மேற்படி ஆவணப்படம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இலங்கைத் தீவின் உள்நாட்டு அரசியலில் அது நிர்ணயகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். முதலாவதாக,அது உண்மையை வெளியே கொண்டுவர முயற்சித்திருக்கிறது.அந்த உண்மையை விசாரித்து நிரூபிக்கும் பொழுது நீதி கிடைக்கும்.இப்பொழுது ஜனாதிபதி நியமித்திருக்கும் விசாரணைக் குழுக்கள் உண்மையைக் கண்டுபிடிக்குமா அல்லது அலன் கீனன் கூறுவது போல உண்மையைத் திசை திருப்புமா? என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இதுவிடயத்தில் விசாரணை குழுக்களின் நம்பகத்தன்மையை, வெளிப்படுத்தன்மையை உறுதிப்படுத்துமாறு கர்தினால் மல்கம் ரஞ்சித் கேட்க வேண்டும்.
குண்டுவெடிப்பில் மொத்தம் 44 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.இலங்கைத் தீவில் இதற்கு முன் நிகழ்ந்த படுகொலைகளில் அவ்வளவு தொகையாக வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டதில்லை.எனவே,சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர்களின் உறவினர்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டிய கட்டாயம் இலங்கைக்கு உண்டு. ஒரு குடும்பத்தின் அதிகார ஆசைக்காக அவ்வாறு வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மையானால்,குறிப்பிட்ட நாடுகள் தமது பிரஜைகளுக்காக நீதியை நிலைநாட்டுமாறு இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் கேட்க வேண்டும்.கேட்பாரா?
குறைந்தபட்சம் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புகள் தொடர்பிலாவது உண்மைகள் வெளிவருமாக இருந்தால், நீதி நிலைநாட்டப்படுமாக இருந்தால், அது அதன் தர்க்கபூர்வ விளைவாக, தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தை ஏதோ ஒரு விதத்தில் பலப்படுத்தும்.