முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினை சேர்ந்த மருத்துவர்களால் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
”வைத்தியர்கள் நாட்டை விட்டுச் செல்வதால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறு கோரியே” இன்று நண்பகல் 12.30 தொடக்கம் 2.00 மணிவரை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை முன்பாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது வைத்தியர்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படாமை, அதிகரித்த பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டு மாத்திரம் சுமார் 700 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் எனவும், வைத்தியர்களின் பற்றாக்குறை காரணமாக பல வைத்தியசாலைகளை இழுத்து மூடும் அபாயத்தில் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது நிலவும் மருந்து தட்டுப்பாடு, மற்றும் தரம் குறைந்த மருந்துகளின் இறக்குமதி உள்ளிட்ட காரணங்களினால் அநாவசிய உயிரிழப்புகளும் நிகழ்வதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.