அருகில் இருந்துக் கொண்டு கழுத்தை அறுக்கும் செயற்பாட்டை தவிர்த்துக் கொள்வதற்காகவே தயாசிறி ஜயசேகர ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கேள்வி – “தயாசிரி ஜயசேகரவை கட்சியில் இருந்து விலக்குவதற்கு நீங்கள் தான் சில செயற்பாடுகளை முன்னெடுத்ததாக அவர் கூறுகின்றார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒவ்வொரு விடயங்களை கூறி அவரை துரத்தியதாக அவர் கூறுகின்றார்?”
பதில் – “முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலில் குழந்தை அல்ல. அவர் சிரேஸ்ட அரசியல்வாதி ஒருவர்.
கட்சியின் செயலாளர் என்ற ரீதியிலும் தலைவர் என்ற ரீதியிலும் பொறுப்புடன் செயற்பட்டவர்.
அவர் மற்றவர்களின் கதைகளை கேட்டு செயற்படுபவர் அல்ல.
இந்த பிரச்சினைகள் கடந்த 7 மாதங்களுக்கு முன் எழுந்தவை. தங்கள் வாயை காப்பாற்றிக்கொண்டால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது.
யாராக இருந்தாலும் கட்சி தலைவருடன் பயணிக்க முடியவில்லை என்றால் தலைவர் என்று ஏற்றுக்கொண்டு பயணிக்கவில்லை என்றால் யாராக இருந்தாலும் இந்த நிலை தான் ஏற்படும்.
அருகில் இருந்து கழுத்தை அறுக்கும் முன் சில தீர்மானங்களை எடுக்க வேண்டியது தலைவர்களின் பொறுப்பு.
அருகில் இருந்துக்கொண்டு கழுத்தை அறுப்பது போன்ற செயற்பாட்டை தவிர்ப்பதற்காகவே கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக எமக்கு அறிய கிடைத்தது.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பின்னர் உண்மை விடயங்களை அறிந்துக்கொள்ள முடியும். அவர் மீது தற்போதும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.”